ஆண்டவன் பொறுப்பு
 
அருள் நிலா வாசன்
பொறுப்போடு
நானுமிங்கு
வாழ்ந்து பார்க்கிறேன்
பெத்தவங்க
யாரு என்று
தேடிப் பார்க்கிறேன்

தெருக்கோடி
சந்தையெல்லாம்
அலசி பார்க்கிறேன்
வந்து போகும்
வாகனத்தை
திருப்பிப் பார்க்கிறேன்

யாருமில்லா
அனாதையென்று
பேரும் வாங்கினேன்
ஊருமில்லா
பேதையென்று
அதையும் தாங்கினேன்

பொழுது சாயும்
போது எல்லாம்
அழுது தீர்க்கிறேன்
பொட்டைப் புள்ள
தனிய என்று
தலையை போர்க்கிறேன்

துக்கம் வந்து
துரத்துதென்று
நாளும் கூசினேன்
துருப்பிடித்த
வாழ்க்கையென்று
தூக்கி வீசினேன்

பெத்தவங்க
மனசிலதான்
ஏனிந்த வெறுப்பு
இந்த
பொக்கிஷத்தைக்
காப்பதுவோ
அந்த
ஆண்டவன்
பொறுப்பு