எழுக இன்றே

பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்னையினை இழிவுசெய்யும் தமிழா வீட்டில்
     அருந்தமிழைக் கொலைசெய்யும் தமிழா நாட்டில்
உன்மொழியை ஏளனமாய்ப் பேசிப் பேசி
     உயர்மொழியைத் தாழ்வுசெய்து கீழ்மை யானாய்
முன்னோர்கள் வழிவழியாய்ப் பேணிக் காத்த
     முத்தமிழில் பிறமொழியின் மாசைச் சேர்த்து
விண்வெளியில் ஓசோனைக் கெடுத்த தைப்போல்
     விளைவித்தாய் ஊறுதனைத் தூய்மை நீக்கி !

இறைவனையே மயங்கவைத்த மொழிதான் உன்றன்
     இனியமொழி ! தமிழ்புலவன் சொல்லுக் காக
இறைவன்தான் தூதாகச் சென்ற தைப்போல்
     இங்குவேறு மொழியினிலே வரலா றுண்டோ1
குறைசொல்லி இறைவனுக்கே ஆகா தென்று
     குரைக்கின்றார் பழிக்கின்றார் தட்டிக் கேட்டுக்
கறைகழுவ முயன்றதுண்டா ! சொந்த நாட்டில்
     கனல்கக்கி எழுவதற்கும் தயங்கு கின்றாய் !

அறிவியலைத் தமிழ்மொழியில் கற்ப தற்கும்
     ஆகாதென் றுரைக்கின்றார் ஆமென கின்றாய்
அறிவியலைத் தொகைப்பாட்டில் பத்துப் பாட்டில்
   அன்றேஉன் முன்னோர்கள் சொல்லி வைத்தும்
அறிவிலியாய் அதையெடுத்துச் சொல்வ தற்கும்
    அறியாமல் இருக்கின்றாய்! எடுத்து ரைக்கும்
அறிஞரையும் ஏளனமாய் ஏசு கின்றாய்
    அறிவுபெறும் நினைவுமின்றி உறங்கு கின்றாய் !

வடநாட்டார் தலைமீது கல்லை ஏற்றி
     வானுயர்ந்த இமயத்தில் வில்பொ றித்துக்
கடல்கடந்து நாடுகளை வென்றெ டுத்துக்
     கப்பலிலே சென்றங்கே வணிகம் செய்து
நடனமொடு கட்டடமாய் கலையில் ஓங்கி
    நல்லாட்சி பண்பாட்டில் உயர்ந்து நின்ற
தடந்தோளின் தமிழாஉன் பண்டை மாண்பை
     தரைமீது நிலைநாட்ட எழுக இன்றே !


(உலகத் தமிழ் வளர்ச்சி மன்றமும், தமிழர் உலகம் இலக்கியத் திங்களிதழும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை.)