சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதில் சொருகலாமா பிறச்சொல்லை

பாவலர் கருமலைத்தமிழாழன்



காலையிலே எழுந்தவுடன் பல்து லக்கக்
---கனிவாகப் பிரஷ்பண்ணி ; தண்ணீ ராலே
கோலமுகம் கழுவபேஷ்வாஷ் பண்ணி
---கொண்டதேநீர் டீபண்ணி அருந்து கின்றோம் !

வேலைக்குச் செலும்முன்னே முகம்ம ழிக்க
---ஷேவ்பண்ணி டிரஸ்பண்ணி டிபனைப் பண்ணி
ஓலையிலே சங்கத்தில் ஓங்கி ருந்த
---ஒண்டமிழைப் பண்ணிமொழி செய்தோம் இன்று !

வாருங்கள் எனஅன்பாய் அழைப்ப தற்கு
---வம்மின்னாம் தமிழிருக்கக் கம்மின் என்போம்
சேருகின்ற நட்பாலே நண்ப னானால்
--செப்புகின்றோம் தமிழ்விடுத்துப் பிரண்டாம் என்றே !

பாருக்குள் மூத்ததாகத் தனித்தி யங்கிப்
---பலமொழிகள் பெற்றெடுத்த தாயோ இன்று
பேருக்குத் தமிழரென்றே இருப்ப தாலே
---பெருமையுடன் இருந்ததமிழ் தாழ்ந்த திங்கே !

மறைமலையாம் அடிகளொடு பாவா ணர்தாம்
---மணிப்ப்ரவாள கலப்பகற்றித் தந்த போல
கறைநீக்கத் தமிங்கிலராம் வேடம் விட்டுக்
---காத்திடுவோம் தன்மானத் தமிழ ராக !


முதல் பரிசு பெற்ற கவிதை:

மாமதுரை கவிஞர் பேரவை சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதில் சொருகலாமா பிறச்சொல்லை என்ற தலைப்பில் மாநிலஅளவில் நடத்திய கவிதைப் போட்டியில் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களின் கவிதை முதற் பரிசு பெற்றது. 06 – 12 – 2015 அன்று மதுரையில் நடந்த விழாவில் மன்றத் தலைவர் கவிஞர் வீரபாண்டித் தென்னவன் அவர்களும் மன்றச் செயலாளர் குறுங்கவிதை மன்னன் கவிஞர் இரவி அவர்களும் கவிபாரதி விருதளித்துப் பாராட்டிச் சிறப்பு செய்தனர்.