பேய்யெனப்   பெய்த   மழை

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

நிலமெங்கே     வயலெங்கே     வீதி    எங்கே

          நின்றிருந்த    வீடெங்கே     மரங்க   ளெங்கே

நலம்கேட்டுப்    பக்கத்தில்   வாழ்ந்தி   ருந்த

          நண்பரொடு    சுற்றத்தார்    எங்கே   எங்கே

வலம்வந்த    காற்றேநீ    வன்ம    மாகி

          வாரிவந்து    பேய்மழையாய்க்    கொட்டித்   தீர்த்துக்

குலம்முழுதும்    இலங்கையிலே    அழித்த  போல

          குடியிருந்த    பகுதிகளை    அழித்து   விட்டாய் !

 

கடலூரைக்    குரங்கின்கை    மாலை    யாக்கிக்

          காஞ்சிபுரம்    திருவள்ளூர்    சென்னை    தன்னில்

நடனமென    ஊழிக்கூத்    தரங்க    மேற்றி

          நகரத்தைத்    தீவாக்கி   மிதக்க    விட்டாய்

படகுதனில்    மீட்புபணி    பறந்து   வானில்

          பசிக்குணவைப்    பொட்டலமாய்ப்    போட    வைத்தாய்

நடமாடும்    இடங்களினை   மூழ்க    வைத்து

          நாள்வாழ்வை    அந்தரத்தில்    தொங்க   விட்டாய் !

 

எதற்கிந்த    பெருங்கோபம்     எல்லாம்    உன்றன்

          ஏரிகளை    மனைகளாக்கி    விற்ற    தாலா

மதகுடைய     ஏரிகளைத்    தூர்வா    ராமல்

          மழைநீர்நீ    செலும்வழியை    அடைத்த   தாலா

வதம்செய்வாய்    என்பதினை    ஆட்சி   யாளர்

          வணிகர்கள்    தெளிவாக    உணர்ந்து    கொண்டார்

மதயானை    தனையடக்கும்    அங்குச    மாக

          மாற்றுவழி    செய்திடுவர்    அமைதி    கொள்வாய் !