நம்வாழ்வு விடிந்திடட்டும் !

எம். ஜெயராமசர்மா - மெல்பேண் - அவுஸ்திரேலியா
வெள்ளம் வடிந்தோட வேதனையும் விரைந்தோட
உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும்
நல்லவைகள் நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று
நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் !

இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல்
முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று
அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று
உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் !

நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல்
ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள்
நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர்
சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் !

மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும்
மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே
கோபமொடு கொடுமழையும் குளிர்காற்றும் சேர்ந்ததனால்
மார்கழியை நினைப்பதற்கே மக்களெலாம் நடுங்குகின்றார் !

நடுக்கமுறும் மனம்திரும்ப நம்வாசல் பொங்கல்வரும்
இறுக்கமெலாம் இறங்கிவிட இன்பமாய் பொங்கிடுவோம்
பொறுப்புடனே பொங்கல்செய்தால் பூரிப்புவரு மென்றெண்ணி
புத்தரிசி தனைப்பெற்று பொங்கல்பொங்கி மகிழ்ந்திடுவோம் !

சஞ்சலத்தில் உழன்றாரைச் சாதிமதம் பாராது
நெஞ்சார உதவிநின்ற நீள்கரங்கள் உடையாரை
கொஞ்சி யவர்கைபற்றி கூடவே வைத்தபடி
அஞ்சாமல் பொங்கல்செய்து அவர்கையிற் கொடுத்திடுவோம் !

பட்டாசு மத்தாப்பு புத்தாடை அத்தனையும்
இட்டமுடன் இருந்துவிடின் இனித்துவிடா பொங்கலென்பர்
துட்டகுணம் அட்டகாசம் துயர்படுத்தும் அத்தனையும்
பட்டென்று அகலுதலே பாங்கான பொங்கலாகும் !

மக்களது மனங்களிலே மாற்றம்பல வருவதற்கும்
மக்களெலாம் தோழமையில் மகிழ்ந்தென்றும் இருப்பதற்கும்
தைத்திங்கள் வருகின்ற தைப்பொங்கல் அமைகவென
முத்திக்கு வித்தான முழுமுதலை வேண்டிநிற்போம்

கோவில்சென்று கும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்த்திடுவோம்
பாவநிறை செயலையெல்லாம் பள்ளமதில் புதைத்திடுவோம்
தூய்மைநிறை பெரியோரை தொட்டுநின்று வணங்கிடுவோம்
வாய்மைகொண்ட மனத்தோடு வாழவெண்ணிப் பொங்கிடுவோம்

 

jeyaramiyer@yahoo.com.au