கொஞ்சம் கூதல்... நிறையக் காதல்

மன்னார் அமுதன்

கூதல் என்னைக்
கொல்கையில்

உன் நினைவுகள்
கொளுத்திக்
குளிர் காய்கிறேன்

தலையணை அணைத்து
மெத்தையைக் கிழித்து
உன்பெயர் புலம்பையில் - எனைப்
பரிதாபமாய்ப் பார்க்கின்றன
பஞ்சுகள்

அலைபேசியில் உளறிக்கொண்டே
நான் வரைந்த உன் பெயர்
வெள்ளைப் படுக்கையுறையெங்கும்
ஓவியமாய்ச் சிரிக்கிறது

நீ விட்டுச் சென்ற
ஒற்றைத் தலைமுடி..
இரட்டைக் காதணி..
கண்ணாடிப் பொட்டு..
உடைந்த வளையல்..
கொலுசுச் சத்தம்...
ஈர முத்தம்..

என எல்லாவற்றையும்
சொல்லிவிடவா...?

பூக்கிறாய்,
வேண்டாமென வேர்க்கிறாய்
விட்டு விடுவென வெட்கப்படுகிறாய்...

இத்தனைக்கும் காரணம்
இந்த வெட்கம் தானே

ஒவ்வொருமுறை தவம்
கலைந் தெழுகையிலும்
நான் வியர்த்துவடிவேன்
நீ வெட்கப்படுவாய்

பிறகென்ன
மீண்டுமொரு தவம்...

கட்டியணைக்கையில்
வெட்டிச் சுழிப்பாய்...
விடிந்து பார்க்கையில் (என்மேல்)
மடிந்து கிடப்பாய்

ஓட்டைச் சிரட்டையில்
ஊற்றிய தண்ணீராய்...
உனைநோக்கி ஒழுகி
உருகி ஓடுகிறது மனம்

இன்றோடு ஒன்பதுமாதம்
கழியுமொரு யுகமாய்
இன்னும் பத்து நாட்கள்

தலைச்சனைப் பெற்றெடுக்க
தாய்வீடு சென்ற நீ
சேயோடு வருவாய்

மார்பு அவனுக்கு
மடி உனக்கு

மீண்டும் கூதலில்
பஞ்சணைகள் பத்திக்கொள்ளும்

தங்கச்சி வேண்டாமா
தலைச்சன் விளையாட...


 

amujo1984@gmail.com