நோன்பு

டாக்டர் மு. அ.காதர்

விஷப்பரிட்சைகளுக்கு மத்தியில்
ஒரு விஷேசப் பரிட்சை!
ஏழையின் வயிற்றை
எடுத்துக் காட்டும் எக்ஸ்ரே!

இந்த பட்டினியில்தான்
ஆன்மாவின் வயிறு நிரம்புகிறது!
வயிற்றில் அடிப்பவனை
வயிறு அடிக்கிறது!

சுமக்கும் வயிறு புனிதமானது
இன்று –
சுமக்காத வயிறும்
புனிதம் பெறுகிறது!

அன்று –
கூலி கிடைத்ததால்
வயிறு நிரம்பியது
இன்று –
காலி வயிற்றினால்
கூலி நிரம்பியது!
வயிற்றுக்கு கஞ்சி வேண்டும்
நோன்பு நாட்களில்
கஞ்சிக்கு வயிறு வேண்டும்

இது –
இறையோடு உரையாட
குடல் எழுதும் மடல்

புனித ரமலானே வருக வருக!
புவியில் ரஹ்மானின் அருளைத் தருக!


(டாக்டர் மு. அ. காதர் (ஆடிட்டர்) - தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர்)