நீ.. நீ மட்டுமே நீ..

வித்யாசாகர்

1
எத்தனை விளக்குகள்
எரியுமிந்த வீட்டில்
நீ மட்டுமில்லை;

வீடு இருண்டே
கிடக்கிறது..
-------------------

2
தண்ணீர் தா
என்கிறேன்

துண்டெங்கே எனக்
கத்துகிறேன்

தூளியில்
குழந்தை அழுகிறது பாரென்கிறேன்

நிசத்தில் ஒன்றுமே
நடக்கவில்லை,

ஆம் -

நீயில்லாத வீட்டில்
எனக்கென ஒன்றுமே நடப்பதில்லை..
---------------

3
தனிமை சுகம்
தியானம் பெரிது
உடற்பயிற்சி நன்று
விளையாட்டு அலாதி
எனைவிட்டுப் போ என்றெல்லாம்' வக்கனையாக
பேசமுடிகிறது
நீ என்னோடிருக்கையில் மட்டும்!!
-------------------

4
போனால்
திரும்பி வராது உயிர் என்பார்கள்
அர்த்தம் புரிந்ததேயில்லை;

நீ ஊருக்கு போய்
நாளொரு நாள்தான் ஆகிறது
உயிர் போனதாகவே உணர்கிறேன்!!
-----------------

5
உள்ளே வரும்போதே
குழந்தையெங்கே என்பேன்
வாசலில் நீ நிற்பாய்;

உள்ளே வரும்போதே
அம்மா சாப்பிட்டாங்களா என்பேன்,
சாப்பிடாமல் நீயிருப்பாய்,

உள்ளே வரும்போதே
அசதியா என்பாய்,
அமைதியாய் இரு போதுமென்பேன்;

இன்று உள்ளே வரும்போதே
நீயிருக்கிறாயா என்றுப் பார்க்கிறேன்

ஒரேயொருமுறை -
நீ நலமா என்றுக் கேட்டுவைக்க...