சுதந்திரமெனும் பிறப்புரிமை....!

புலமி (க.சி.அம்பிகாவர்ஷினி)




ருண்ட நூற்றாண்டுகளின்
கனவிலிருந்து
மூன்று வண்ணங்களைப்
பிறப்பித்திருக்கிறது
ஆகஸ்ட் பதினைந்து...

போராட்டங்கள் மற்றும்
வீர மரணங்களிலிருந்தும்
அடிமை விலங்கை
உடைத்தெறிந்திருக்கிறது
விடுதலையுணர்வு..

அகிம்சைவழி நின்று
கோலூன்றவும்
முண்டாசுக் கட்டில்
பள்ளுப் பாடவும்
கருவுற்றுக் காத்திருந்தாள்
பாரதத் தாய்....

பிறந்தது சுதந்திரம்
வளர்ந்தது
வாலிபமும் அடைந்தது
வல்லரசுக் கனவினை
காணத் துவங்கி
யாரிடமோ எதனிடமோ
அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றானது...

சீரும் சிறப்புமாய்
அணிவகுக்கும் ராணுவமும்
கலாச்சார நிகழ்வுகளும்
தேசியத் தொலைக்காட்சியைத்
தவறுவதேயில்லை...

இறுதியில்
ஆரஞ்சு மிட்டாய்களையும்
தொலைத்துவிட்டு
காகிதக் கட்டுப் பூக்களோடு
தயாராக இருக்கும் கொடிக்குள்
சக்கரமாய்ச் சுழல்வதை
நிறுத்தவேயில்லை ஊழல்....

என்னிடமும் உன்னிடமும்
கேட்பதற்குக்
குடிமகனென்ற அடையாளத்தையேனும்
வருடாவருடம் சரிபார்க்கிறது
சுதந்திரமெனும் பிறப்புரிமை.....!



ksambigavarshini@gmail.com