சல்லிகட்டுக்கு தடையா?

.கண்ணன்சேகர, திமிரி

 


 

சூரப்புலி பாய்ந்திட துரத்தினாள் முறத்தாலே
   சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே!
போரிடும் களத்திலே புறமுதுகை காட்டாத
   பெற்றமகன் வீரத்தை பெருமையென காட்டுமே!
வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென
   வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே!
ஓரவஞ்ச செயலாலே ஒடுங்காது தமிழினம்
   ஓட்டளிக்கும் மக்களால் ஒடுங்கிடும் ஆட்டமே!

ஏறுதழுவு விளையாட்டால் எங்களது வீரத்தை
   இவ்வுலகம் கண்டிட இரக்கமற்ற தடையேனோ?
பேருபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவினை
   கூறும்போடும் குரங்கென கொள்கையே முறைதானோ?
வேருவிட்ட ஆர்ப்பாட்டம் வீழ்த்திட நினைப்பது
   வீட்டுக்குள் அணுகுண்டு வைப்பதும் சரிதானோ!
ஊருக்கு உரெலாம் உணர்வுகள் கொப்பளிக்க
   ஓரணியில் தமிழனின் உள்ளமும் புரியாதோ!

இடைத்தரகு வணிகத்தால் இழிவான அரசியல்
   இந்தியா தாங்குமா இனிமேலும் அடிமையா?
மடைத்திறந்த வெள்ளமாய் மக்களின் போராட்டம்
   மண்ணினது பொருளெல்லாம் மாற்றாரின் உடமையா?
தடையிலா வேளாண்மை தமிழகத்தில் மலர்ந்திட
   தடையென இருப்பதை தள்ளுவதும் மடமையா?
விடைக்கூறி விளக்கினால் வெற்றிகள் வந்திட
   விளையாடும் சல்லிக்கட்டு விழாவது கொடுமையா?


 


.கண்ணன்சேகர், திமிரி :9894976159.