அகாலத்தில் மரித்தவனின் கைபேசி எண்கள்

எம்.ரிஷான் ஷெரீப்
 



ரணித்தவர்களுக்கு வரும் கைபேசி அழைப்புக்கள்
அலைவரிசைகளில் அதிர்ந்து பெருகி
பேரலையாகித் துரத்த
கரை மணலென எங்கும் பரந்து விடுகின்றன
அவர்களது தொலைபேசி எண்கள்

கடற்கரைச் சிப்பிகள் பொறுக்கும் சிறுமி
மீன் வலைக்காரன்
மணற் சிற்பக் கலைஞன்
உப்பு நீரில் கால் நனைப்பவர்களென ஓரோரும்
தாமறியாது எண்களைப் பொறுக்கி
கடலில் எறிந்து விடுகிறார்கள்

அன்றிலிருந்து
இருளில் தொலைந்துவிடும்
ஆத்மாக்களின் சுவடுகள்
அம் மணலை மிதித்துதிர்க்கும் துகள்கள்
தனித்தனி எண்களாகி
படகுகளென வெளியெங்கும் மிதக்கும்
எக் காலமும்

அவ்வாறானதொரு காலத்தில்
அகாலத்தில் மரித்தவனின் எண்கள்
அவனை அழைப்பவர்களது விரல் துடுப்புக்களினூடு
அசைந்தசைந்து... அசைந்தபடியே
 


mrishanshareef@gmail.com