யாரிங்கே மாறுவது  முதலில் நீ மாறு..

வித்யாசாகர்


டைந்தத் தார்சாலையினைப் போல
மனது ஆங்கங்கே
குழியும் குறையோடும் தான் இருக்கிறது..

மேலேறிச் செல்லும்
காலத்தின் நாகரீக நாற்றமோ
மரணத்தை மாத்திரைக்குள் அடைக்கிறது..

உண்ணும் உணவில் நஞ்சு
உடையில் தீ
உறங்கும் இரவில் வெளி யெங்கும் சாபம்

தண்ணீர் விலைக்கு கிடைக்கும்
காற்று காசுக்கே நிரம்பும்; கனவெங்கும்
புண்ணென நோகு(ம்) அரசியலே நமையாளும்

பேச்சில் கவுச்சிவாசம்
பார்வையில் பொய்வெளிச்சம்
வாழ்தலை மேல்கீழாகவே சித்தரிக்கும் அறிவு

எல்லாம் மருந்திட்டு
பழுத்திட்ட பழங்களைப்போல
பணத்திற்கு மட்டுமே -
உறங்கியெழும் வெம்பிய வாழ்க்கைப்பயணம்

நெஞ்செல்லாம் நெருப்பேறி சுடும்
காமத்தை வெல்வதற்குள்  வாழ்க்கை
பல்கொட்டி சொல்லறுந்துப் போகிறது

பொறாமை பெருங்குற்றமல்ல
அதை யார்மேல் காட்டுவதென தெரியவே
முடி நரைத்து உறவருந்துவிடுகிறோம்

சாதி உதிர்வதற்குள் மதம் புரிவதற்குள்
மயானத்தில் குழிவெட்டி - வெறும்
மண்ணும் சதையுமாய் தீர்ந்துப் போகிறோம்

ஆசை, காண்பதன்மீதெல்லாம் ஆசை
ஆசையில் நைந்து நைந்தே
எண்ணக் கிழிசலில் மரணம் படிந்துவிடுகிறது

எல்லாமே தனக்கு வேண்டும்
எல்லாவற்றிலும் தன் பெயர் வேண்டும்
எது செய்தாலும் நான் செய்தேன்

பிறகு யார் யாருக்காக வாழ்வதிங்கே?

இந்த நொடி
இந்த பிறப்பு
இந்த வாழ்க்கை வானத்தையும்
பூமியையும் மிஞ்சியது

அமிலம் பொங்கும் கடலுள்
அன்பெனும்
ஒரு புள்ளியிலிருந்து பிறப்பது

அமிலத்தில் குளிர்வதும்
அன்பினால் பூப்பதும் இதோ இனி உன் கையில்..
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்