அன்னைதனை மறப்போமா? 

கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்
 

சேயுள்ளம் தனையறிந்து
            தேவைகளைநிறைவேற்றும்
தாயுள்ளம் போன்றிந்தத்
            தரணியிலேவேறுண்டோ?

தெய்வத்தைத் தேடிமக்கள்
            திருத்தலங்கள் செல்லுவதேன்?
மெய்யானதெய்வங்கள்
            மேதினியில் அன்னையரே!

தானளிந்துபோனாலும்
            தன்குழந்தைவாழவென
ஆனமட்டும் பாடுபடும்
            அன்னைதனைமறப்பேனா?

உதிரத்தால் உயிரீந்து
            உலகத்துக் களித்திடவுன்
உதரத்தில் காத்தவளே
            உனைமறந்துவாழ்வேனா?

பத்தியமோபட்டினியோ
            பக்குவமாய் அதைக்காத்து
நித்தம்நீசெய்தவற்றை
            நினைத்துள்ளம் நெகிழ்கின்றேன்.

என்னையிங்குஉருவாக்கி
            இப்புவியில் உயர்த்தவெனத்
தன்னைநிதம் வருத்தியஎன்
            தாயவளைமறப்பேனா?

கற்றோரின் ஆசியுடன்
            கைகோர்த்துநடைபயிலப்
பெற்றவளேநீசெய்தாய்!
            பிறவியிதன் பயனீந்தாய்!!

என்சுவைக்குஏற்றபடி
            எனக்கெல்லாம் தந்தவளே!
உன்நினைவுச் சுகத்தோடு
            உலகத்தில் நான்வாழ்வேன்!!

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்