ஆயிரமாயிரம் பாடலின் அன்னை

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ணையாத தீபம் அருளாக மீட்டி
       அருகிற் கிடந்த படியால்
கணையாக முந்தும் கருத்தாள மிட்டு
       கனியப் பிழிந்த கவியால்
மணையான என்னை மகிழ்வோடுந் தமிழை
       மனத்துட் சுரந்த வகையால்
எனையாள அன்னை இகலோடு வந்த
       இதழாம் புதுமை அவளே!

ஒருவேளை சோறு எனையாள ஊட்டி
       இடுக்கண் ணகற்றும் எழிலாள்
மறுவேளை பார்த்து மடிமீது வைத்து
       மருகத் திணிக்கும் அழகாள்
பெறுவேனோ மீண்டும் பெற்றாளை இனிதே
       பொழுதிற் கனிந்த புகலாய்
அறுகாக ஊ(ன்)றி அறிவோடு தொட்டில்
       அதுவாய் மலர்ந்த அறுகால்!

அழகான முற்றத் தடுக்கான மண்ணில்
       அஆஇ எழுதி உதித்தாய்
சுளகோடும் தெள்ளித் தெறிவாகும் முத்தில்
       திரட்டும் கணக்கும் பதித்தாய்
பழமாக நின்ற பதியோடு ஆரம்
      படியாய்க் கனிந்த பதிப்பே
முழமாகக் காட்டி முனைப்பாக ஐந்தில்
       முழுதின் புலமை அளித்தாய்!

திருவாரம் பாடி துணையான வேலன்
      தொடவும் புகன்ற துருவில்
அறுசீரும் ஆறு அழகான சொல்லில்
       அருமந் திரத்துங் கருவாய்!
உறுமானி யாகத் தருவாக வைத்தாய்
      உருவந் துருவ முலகில்
பெறுமானம் வைத்தேன் புகலோடு முன்னைப்
     பொழிந்தாய் தமிழின் புதல்வீ !



புளிமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமா புளிமா புளிமா .
அடிதோறும் 21 எழுத்துகள் உள்ள இதுவொரு சந்த விருத்தம்.

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்