ஏய் என் பேனாவே!

செம்மதி


ஏய் என் பேனாவே!
ஏன் எழுதத்துடிக்கிறாய்?
என்னை சிறையிலிடப்போகிறாயா?
இல்லை சிரச்சேதம் செய்யப்போகிறாயா?
நீதி செத்துவிட்ட தேசத்தில்
உனக்கு என்ன வேலை?
அதர்மம் தலைவிரித்து ஆடுகையில்
உண்மை சொன்னால்
நீ சிலுவையில் அறையப்படுவாய்
அல்லது சிறையிடப்படுவாய்

ஏய் என் பேனாவே!
போர் நடந்த போர்
தவிர்ப்பு வலையத்தில்
கோரமாக கொல்லப்பட்ட
எம் உறவுகள் பற்றி
ஏதும் எழுதிவிடாதே
உண்மை செல்வது குற்றம் என்று
இருபது என்ன, முப்பது ஆண்டுகளும்
சிறையிலிடக்கூடும்

ஐயோ என் பேனாவே!
செட்டிகுளம் கானகத்தில்
சீரழியும் எம்மவர் வாழும் வாழ்க்கைபற்றி
ஏதேனும் எழுதி வைத்துவிடாதே
சிவராம், நடேசன் நிலை
எனக்கும் தந்துவிடாதே

ஏய் என் உயிர்ப் போனாவே!
இறுதிப்போரின் இறுதிக்காலத்தில்
தூய்மையான விடுதலைப்போராட்டம்
மாசுபடுத்தப்பட்ட
கதைகளை கக்கிவிடாதே
முறிந்த பனைமரமாய்
என்னையும் ஆக்கிவிடாதே

ஏய் என் நேய பேனாவே!
சொந்த நாட்டில் வதைக்கப்பட்டு
தொலைக்கப்பட்டவர்,
புதைக்கப்பட்டவர்,
சிதைக்கப்பட்டவர் கதைகளை
கிறுக்கிவிடாதே என்னையும் வதைத்து
வீசிவிட வைத்துவிடாதே

ஏய் என் தூய பேனாவே!
குற்றமற்ற குற்றவாழிகளாய்
தமிழராய் பிறந்ததே குற்றம் என்று
வழக்கும் இன்றி விசாரணையும் இன்றி
சிறை வைகப்பட்டிருக்கும்
எம்மவர் பற்றி
ஏதும் எழுதிவிடாதே
அதர்மத்தார் கையால்
என்னையும் அழித்துவிடாதே



chemmathy@gmail.com