அனலாய்.....!

மணிமாலா மதியழகன்

ருத்தரித்த வானம்
கதறிக்கொண்டு ஈன்றது
மாரி என்னும் மகவை!
மாதம் மூன்று பிள்ளைகளுக்கு
குறைவின்றிப் பெற்றதால்
மன்னனும் மக்களும்
மகிழ்ச்சியில் திளைத்தனர்
ஒரு காலத்தில்!
அந்நிய தொழிற்சாலைகளை
அண்டவிட்டதின் பலனாய்
காட்டையும் மேட்டையும் சமமாக்கி
வளமிகுந்த நாட்டை
வறண்ட பாலைவனமாக்கி
செல்வத்தைக் கொழித்தன
சுயநலக் கும்பல்கள்!
வானத்தின் கணவனான
வனங்களை அழித்ததால்
இன்று மலடாகிப்போனது
மும்மாரி பொழிந்த வானம்!
கருத்தரிக்கும் வானமின்று
கைம்பெண்ணாக மாறியது
தன்னலமிக்க கயவர்களின்
சூழ்ச்சியன்றோ!
கணவனைக் கொன்ற
கோபத்தை கட்டுக்கடங்காமல்
நம்மீது அனலாகக்காட்ட
தாளமுடியாமல் பொசுங்கித்தான்
போகிறோம் நாமும்!
கைம்பெண்ணுக்கு மறுவாழ்வாய்
மரக்கன்றுகளை ஊன்றி
மறுமணம் புரிந்திடுவோம்
நாடு செழிக்க நல்ல
மழை வளம் பெற்றிடுவோம்!



                                 
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்