வறுமை

பெருமாங்குப்பம் சா.சம்பத்து



வறுமை...

உலகம்
ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
ஒற்றைச் சொல் !

வறுமை...

ஆளும் அறிவியலாலும்
அழிக்க முடியாத
இழிவின் எச்சம் !

வறுமை...

மண்ணால் மொழியால் மாந்தன்
மாறுபட்டாலும்
விண் ஓடும் மேகம் போல்-
அவனைச்
சுற்றிச் சுழலும் சொல் !

வறுமை...

உலகம்
அறம் எனும் சொல்லின்
செயல் வடிவத்தைக் காணும்வரை
அழியாமல் நிலைபெறப்போகும்
பழிச் சொல் !

வறுமை...

அகராதிகள்
வறுமை எனும் சொல்லுக்கான
பொருளை
இழந்துவிடக் கூடாது என
சமுதாயம்
காட்சிப்பொருளாய்க் கட்டிக்காக்கும்
கயமையின் தோற்றம்!

வறுமை...

சுரண்டல் கொள்கையினால்
ஏழைகள் ஏற்றுக்கொள்ளும்
விளிம்பு நிலையின் அடையாளம்!

உலகம்
இந்த அடையாளத்தை
அழித்தால் தான்
எதிர்காலம் !

 



       

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்