குருநாதர் ம.செ.அலெக்சாந்தருக்கு ஒரு கவிதாஞ்சலி

கவிஞர் அனலை ஆ.இராசேந்திரம்




ண்டமிழ்ப் பண்புசால் தகைசால் ஐய
பண்டித செல்வ ராசப் பெரியோய்
போயினை நீயெனும் மொழியது மெய்யா?
வாயிதழ் இனிக்கக் கண்மலர் விரித்து
அன்பெனும் பாசமொழியி னாலணைத்துத்
தூமொழி பேசும் நீயோ போயினை
என்னிரு கரங்கள் ஒன்றாய்க் குவித்து
நின்னை வணங்கி வரைகுவன் கவிதை
ஈழம் என்னும் இணையில் தாயகம்
வாழ்ந்த காலை வளரிளம் பருவம்
அமிழ்தென ஆன்றோர் போற்றும் தமிழுடன்
பழகிய பான்மையன் ஆதலிற் கவிதை
எழுதிட விழைந்தெம் ஊர்நூலகத்திற்
காரிகை பெற்றுக் கற்றனன் யாப்பு
சிங்கள வெறியர் ஆட்சிச் சிறுமையில்
பொங்கி எழுந்த போர்ப்புலி வீரர்
மன்னுயிர் தமிழ்மொழி மாகலை விழுமியம்
கண்ணெனக் கருதிக் காத்திட இன்னுயிர்
ஈந்து இரக்கமில் ஈனரை ஓட்டிடச்
செங்களம் புக்கார் சீருடைக்கொடியர்
தொல்லை தொடர்ந்தது தினந்தொறும் வளர்ந்தது
தூரிகை தீட்டும் துய்யநல் ஓவியம்
பாதியில் போனது பறந்தனன் சீமை
தீந்தமிழ் யாப்புத் தெரிந்திடும் வேட்கை
ஓய்ந்திடவில்லை தேம்சுமா நதிக்கரை
ஓரத் தொருகடை கவிதைக் கலையெனும்
பேருடை அருநூல் பெற்றுப் படித்தனன்
புரிந்தது சிறிது புதிராய்ச் சிந்தையில்
விரிந்ததோ பெரிது! விளக்குவார் இலராய்ப்
பனிபொழி கனடா புகுந்தனன் பண்டித
இனிதே பயிற்றிய அருங்கவி இலக்கணம்
பெற்றன் ஐய! பெருமைசால் நின்பால்
கற்றதென் வாழ்வின் கழறிட வொண்ணாப்
பொற்புடைப் பேறு! பூந்தமிழ் அறிஞ!
காசினி எங்கும் கல்வி பரப்பும்
மாசில் ஆசிரி யப்பெரி யோரை
ஆக்கி அளித்தே அரும்தமிழ் வாழ்வுப்
போக்கிற் பெரும்பணி புரிந்தநின் பெற்றி
போற்றுவம் யாங்கள் புலவநீ எங்கட்(கு)
ஆற்றிய தொண்டு வாழு மெந்நாளும்
சிரித்துப் பேசிச் சிந்தை பதிந்திட
விரித்துரை ஆற்றும் வித்தக! நீயோ
எம்மதத் திருப்பினும் அன்பினைப் போற்றும்
செம்மதப் பண்புடைத் தமிழ் மகன் அலவோ?
தெ ள்ளிய மனமுடை வெள்ளிய மொழியோய்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்
வலவன் ஏவா வானூர் தியிவந்(து)
இறைவன் அடியில் இன்புற் றிருப்பராம்
புறம்சொலும் நெறியிற் பெரியை நீயும்
வானகம் சென்றாய் இறையடி வாழுதி!
சீரிய நின்திரு நாமம் இப்புவி
நிலைக்கும் அன்பர் நெஞ்சினில் நின்றே!


கவிஞர் அனலை ஆ.இராசேந்திரம்

 

 


 

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்