நானறிந்த ஆசான் பண்டிதர் அலெக்ஸாந்தர்

கவிஞர் முருகேசு மயில்வாகனன்
 

ல்லநகர் வாழவைத்த நாதன் அலெக்ஸாந்தர்
சொல்லாமல் சென்றுவிட்டார் சோதியடி – அல்லலுறும்
செய்தியெம்மைச் சேரச் செயலிழந்த மாணவர்நாம்
தெய்வத்தை வேண்டிநின்றோம் சேர்ந்து.

ஆசிரியர் பற்றி அறிந்தவற்றைக் கூறுகின்றேன்
தேசிய நோக்கும் செறிந்தறிவும் - காசியமாய்ப்
பேசும் திறனும் பெருமையிலா நல்லாசான்
மாசு மறுவற்ற மன்.

சிரித்த முகத்துடன் சிந்தும் கருத்தை
உரியவர்க் கேற்பாய் உரைக்கும் - பெரியாரின்று
எம்மிடம் இல்லையே என்றேங்கும் தன்மையினரய்
விம்மி அழுகின்றோம் விரைந்து.

பாசநிறை ஆசான் பணிமுடிந்து சென்றுவிட்டார்
தோசமில் செம்மொழியைச் சேர்ந்தோர்க்கு – ஆசையாய்க்
கற்பித்த நல்லான் கறையில்லாக் காவலன்
நற்கதி சேர்ந்தாரே நன்கு.

பிறவிப் பெரும்பயனைப் பேறாகக் கொண்டே
அறவழி வாழ்ந்தே அனைவர் – சிறப்புக்காய்
அன்றுதொட்டு இன்றுவரை ஆற்றுபணி எத்தனையோ
எண்ணத் தகுமோ எடுத்து.

நல்லா சிரியராய் நற்பணி யாளராய்
கொல்லும் சிரிப்பாலே கோடிட்டுப் - பல்லோர்க்கும்
ஏற்றபதில் சொல்லி எடுத்தாளும் வல்லமை
ஊற்றெடுக்கும் உண்மை உறுதி.

நல்லா சிரியர் நலன்நோக்காப் பண்பாளன்
உல்லாச வாழ்வை உதறிவிட்டு – பல்லோரும்
போற்றும் மனிதத்தைப் பேறாகக் கொண்டவர்
ஆற்றல் அவர்பணி வாம்.

தனக்கென வாழாப் பிறர்க்கு ரியாளன்
மனம்நொந்து பேசாத மாண்பார் – தனஞ்சேர்க்காக்
கல்வியாளன் கர்த்தர் வழிகாட்டக் காலமெல்லாம்
எல்மேலார்க்கும் கல்விதந்தாய் ஏற்று.

செந்தமிழ் வாழ்வுக்;காய்ச் சேவைசெய்தாய் காலமெல்லாம்
நிந்தனை செய்வோரை நேர்நின்றே – உந்தன்
திறத்தால் எதிர்கொண்டே தீர்க்கும் சிறப்பாம்
திறனுனக் கென்றுமே தான்.

வெள்ளையுள்ளம் கொண்டவனே வேதபேத மற்றதனால்
கொள்ளைகொண்டாய் மாணவரைக் கள்ளமின்றி – அள்ளிக்
கொடுத்தாயே செந்தமிழை கொள்முதல் இன்றி
நடுநிலை மீறாத நட்பு.

சிந்தை கலங்குகின்றோம் செம்மொழி கற்றவர்கள்
வந்தவினை வல்வினை யானதால் - வாழ்வகன்று
சென்ற அலெக்ஸாந்தர் செய்திகேட்டு என்செய்வோம்
அன்னார் பணிதொடர்வோம் ஆம்.

வள்ளுவர் வாய்மொழியை வாழ்க்கையில் கையாண்டே
உள்ளங் களிக்க உயர்ந்துநின்றாய் - கள்ளமிலாக்
காதலனாய் கொண்டவளைக் கண்போலக் காத்துநின்றாய்
சோதனைக் கஞ்சாத சேய்.


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்