மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !

பாவலர் கருமலைத்தமிழாழன்
 

காலத்தை வென்றென்றும் நிலைத்து நிற்கும்
       காவியமாம் எம்ஜிஆர்எனும் மூன்றெ ழுத்து
ஞாலத்து மக்கள்தம் நெஞ்சி லெல்லாம்
       ஞாபகமாய்க் குடியிருக்கும் அன்பின் சொத்து
கோலத்தில் நடிகராகப் புரட்சி செய்து
       கோலோச்சித் தலைவராக உயர்ந்த வித்து
பாலத்தை மக்களுடன் போட்டுக் கொண்டு
       பாசத்தில் முதல்வரான பண்பின் முத்து !

யாராளும் வீழ்த்தவொண்ணா தலைவ ராக
       யாராளும் வீழ்த்தவொண்ணா முதல்வ ராக
ஊராண்ட உத்தமர்தாம் ! தமிழர் தம்மின்
      உயிரோடும் உணர்வோடும் கலந்த வர்தாம்
சீராளன் இவர்நின்றால் பொதுக்கூட் டந்தான்
       சீரடியை எடுத்துவைத்தால் ஊர்வ லந்தான்
பேராளன் இவருக்கு மட்டு மிந்த
       பெருமையெல்லாம் ! இல்லைவேறு யார்க்கு மிங்கே !

சீர்திருத்தப் புரட்சிகளைச் செய்த தாலே
      சிறப்பாக நல்புரட்சித் தலைவ ரென்றார்
ஊர்மக்கள் மீதன்பு செய்த தாலே
      உயர்வாக மக்கள்தம் திலக மென்றார்
யார்வந்து கேட்டபோதும் கொடுத்த தாலே
      யாவருமே பொன்மனத்துச் செம்ம லென்றார்
வேர்பலாபோல் அனைவருக்கும் இனித்த தாலே
       வெல்லுமென்றன் இதயக்கனி என்றார் அண்ணா !

செங்கதிரே அவர்நிறத்திற் குவமை யாகும்
     செம்முழைப்பே அவர்கற்ற கல்வி யாகும்
தங்கிருந்த வறுமையினை இளமை தொட்டுத்
       தகர்ப்பதிலே முன்நின்று வெற்றி கண்டார்
எங்கிருந்தோ வந்துதவி கேட்டோர்க் கெல்லாம்
       எடுத்தெடுத்தே இருகைகளால் அளித்த தாலே
மங்காத கொடைநெஞ்சாய் மக்கள் நெஞ்சில் !
       மகத்தான தலைவராக இன்றும் உள்ளார்

கடையேழு வள்ளலெனும் சொல்லை மாற்றிக்
      காணுமெட்டாய் திகழ்ந்திட்டார் கருணை யாலே
நடைபோட்டார் நடிப்பினிலே நடித்த தைப்போல்
       நாள்வாழ்வில் கடைபிடித்தார் ! அதனால் மக்கள்
படைகொண்டார் ! அதிகாரம் இல்லா போதும்
       பாசத்தால் தமிழினத்தை அடிமை கொண்டார்
குடையாகச் செங்கோலைப் பிடித்து மக்கள்
      குடியாட்சி செய்ததாலே குடிக்குள் வாழ்ந்தார் !

தஞ்சையிலே தமிழன்னை தலைநி மிர்த்தித்
       தன்னாட்சி பல்கலையாம் கழகம் கண்டார்
விஞ்சிநின்று தமிழ்உலகைக் காண்ப தற்கு
      வியன்மதுரை நகரினிலே சங்கம் வைத்தார்
கொஞ்சுகின்ற மழலையர்கள் கல்வி கற்கக்
     கொடும்பசியைப் போக்கிடச்சத் துணவை ஈந்தார்
வஞ்சகமே இல்லாத பொன்ம னத்தால்
     வாழ்த்துகின்ற மக்களாலே வாழு கின்றார் !

நடிகரினைக் கூத்தாடி என்று சொல்லி
நாட்டோர்கள் இழிவுசெய்த போக்கை மாற்றி
நடிகரினை மதித்தவரைப் போற்று கின்ற
நல்லதொரு மாற்றத்தைச் செய்த மேலோன் !
நடிப்புவேறு வாழ்க்கைவேறு என்றே பல்லோர்
நடிப்புதனைத் தொழிலாகச் செய்த போது
நடித்தபடி வாழ்க்கையிலும் நடந்து காட்டி
நாட்டிற்குக் காட்டாக திகழ்ந்த நல்லோன் !

திரைதன்னில் புகைபிடித்தல் குடித்தல் என்ற
     தீச்செயலை ஒருபோதும் ஏற்றி டாமல்
திரைப்படங்கள் மக்களுக்கு வழியைக் காட்டி
     திருத்துகின்ற சாதனமாய்ச் செய்த செம்மல் !
திரைப்படத்தில் நல்லவனாய் நடித்த தைப்போல்
   தினம்வாழ்வில் கடைபிடித்தே வாழ்ந்த பண்போன்
திரைப்படத்தில் தான்சொன்ன கருத்தை யெல்லாம்
    திறமையான முதல்வராக செய்த வல்லோன் !

அன்னையினைக் குடியிருந்த கோயி லென்றே
    அனுதினமும் தெய்வத்தாய் எனவ ணங்கித்
துன்பத்தில் துடித்தோரைக் கரையில் சேர்த்துத்
    துயர்துடைத்த படகோட்டி யாக வாழ்ந்து
மின்னுகின்ற கலங்கரையாம் விளக்காய் நின்று
    மீட்டுயேழை யர்க்குஒளி விளக்காய்த் திகழ்ந்து
நன்றாக எங்கவீட்டுப் பிள்ளை யென்றே
   நாடுபோற்றும் உத்தமர்தம் வழியில் நடப்போம் !
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்