ஆயிரத்தில் ஒருவன்

வீணைமைந்தன்
 

பாவேந்தர் உணர்வலைபோல் தமிழ்முழக்கம் செய்திடுவார்,
மூவேந்தர் சேர-சோழ-மாறன் போல் வீரனாவர்,
நாவேந்தர் பேரறிஞர் அண்ணாவின் தம்பியானார்,
பூவேந்தன் புன்சிரிப்பில் புவியோரை மயக்கிடுவார்,
கோவேந்தன் கொள்கையிலே கடமை யெனும் மூச்சிருக்கும்,
ஆவிதான் போனபின்பும் அவன் பேச்சே ஆள்கிறது,
கார்கால மழையெனவே கொடுத்துதவும் குணமுடையான்,
தேர் ஈந்த தார்மார்பன் பாரிவள்ளல் இவரன்றோ!,

யாரொருவர் இவர்போன்று திரைவானில் சிறகடித்தார்,
பாரெங்கும் பரந்திருக்கும் உறவுகளை இரத்தத்தின் இரத்தமென்பார்,
ஊரெங்கும் வாழுகின்ற தாய்க்குலத்தின் 'காவல்காரன்'
ஏர்பூட்டி உழுகின்ற அனைவர்க்கும் தலையாய 'விவசாயி'
சோறுடைத்துப் பசி போக்கும் 'எங்கள் வீட்டுப்பிள்ளை'
பயிர்வளர்த்து மக்களெல்லாம் பசியாற உண்பதற்கு விதி சமைத்தார்,
பள்ளியிலே படிக்கின்ற பாலகர்க்கும் சத்துணவுத் திட்டம் தந்தார்,
மார்பினிலே வேல்தாங்கிப் போராடும் 'மன்னாதி மன்னன்'
உயிர்தந்து போராடும் தமிழீழ மக்களுக்கு
உரிமையுடன் உதவிசெய்த உத்தமத்தலைவனிவன்,
மயிரிழையில் உயிர் பிழைத்து மறுபிறவியெடுத்த மகன்,
பெயர் சொல்லிப் புகழுரைப்போம்!,
ஆயிரம் ஆண்டு சென்றாலும் 'மக்கள்திலகம்' என்றும்
'ஆயிரத்தில் ஒருவன்' இவனென்றே தமிழ்பாடும்!
நூறாண்டு விழாவெடுத்து நன்றிதனைக்காட்டிடுவோம்!
 
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்