இழப்பு

பெருமாங்குப்பம், சா.சம்பத்து
நின்
எழுத்தும் பேச்சும்
எப்போதும் தனித்தமிழில்...!

நின்
தமிழ்ப் பயணம்
நில்லாமல் நடந்தவரை
தமிழுக்குப் போர்ப்படை...!

அந்த
மொழியழகும் பேச்சழகும்
இல்லாமல் தவிக்குதிந்தத் தமிழ்ப்படை...!

பிழையின்றித் தமிழெழுதக்
காத்திருக்கும்-தமிழ்ப்
பிள்ளைகட்கோ மொழியிழப்பு...!

நின் இழப்பால்...
மொழியழிப்போர் முன் நின்ற
மொழிப்போர் வீரர்களின்
அணிவகுப்பில் செறிவிழப்பு...!

இலக்கணம் இலக்கியம் என
எங்களை
இரு தடத்தினில் இயக்கிய
நல்லான் நன்னன்
இல்லாமல் போனது
எல்லோர்க்கும் மொழியிழப்பு...!

எண்ணும் எழுத்தும் என
அலைகாட்சியை அலங்கரித்தாய்
மண்ணும் மொழியும் என
மரபு நடை வழி நடந்தாய்...!

தமிழ்ப் பூவில்
இழிவமர்ந்து
மணம் அழிக்கும் காலம்
இழிவழிக்கும் தமிழ்ச்சாரல்
இல்லாமல் போனதென்ன...!

மண் மரபின் முகவரிகள்
மெல் அழிவை அணியுங்கால்
நன்னன் வரிகளெல்லாம்
கண்ணீரில் நனைவதென்ன...?
 


பெருமாங்குப்பம், சா.சம்பத்து

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்