கனவு நனவாகும் காண்

கவிஞர் இனியன்

ண்மூடித் தூங்கின் கனவுவரும் நண்பகலில்
கண்ணிமை மூடா கனவுவரும் -நண்ணி
தினமும் உறங்க விடாமல் செயின் அக்
கனவு நனவாகும் காண்

உனது திறமை உனது முயற்சி
உனக்குச் சிறகாய் உளவாம் – மனத்தில்
தினவை உணர்க தினமுழை பின்னுன்
கனவு நனவாகும் காண்

சூல்கொள் மலர்தான் சுவைசேர் கனிதரும்
கால்கோளு மில்லாமல் கட்டடமா?- தோல்வி
உனதெனக் கொள்க; உழைக்கத் தொடங்கு
கனவு நனவாகும் காண்.

பறந்திட எண்ணிப் பயிற்சிகள் செய்வாய்
சிறகொடிந்து வீழ்வாய் சிலகால்- பிறரிடம்
சினங்கொள லாகா; சிறகை விரிஉன்
கனவு நனவாகும் காண்.

சிறுமுயற்சி வேண்டாம் சிலந்திவலை யாலே
உறுமீன் பிடித்தலும் உண்டோ?- குறுகேல்
நினைபெரிதாய் நித்தம் முயல்பெரிதாய் நாளை
கனவு நனவாகும் காண்கவிஞர் இனியன் 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்