மாவீரர் வாழி கவிஞர்

அனலை ஆ.இராசேந்திரம்
 



க்காலம் ஒருகாலம்! ஈழ மண்ணில்
       அழகுமகள் குடியிருந்த இனிய காலம்!
முக்காட்டுள் முகம்மூடி வாழும் அந்த
       முகம்மதியப் பெண்களென மாற்றார் கையில்
சிக்குண்டு தமிழர்நாம் சீரி ழந்து
       சிதைவுண்டு போகுநிலை பார்த்தாற் றாமல்
எக்காலும் காப்போமென் றெழுந்து நின்று!
       எமைப்புரந்த புலிவாழ்ந்த வீரக் காலம்!

காலமடா காலமது உயர்வின் காலம்!
       கனித்தமிழர் தமையாண்ட வண்ணக் காலம்!
ஞாலத்து நாடெல்லாம் நம்மேல் வைத்த
       நயனங்கள் மூடாது வியந்த காலம்!
நீலவான் நிலம்தீநீர் காற்று யாவும்
     நிரைநிரையாய்ப் புலிக்கொடிகள் பறந்த காலம்!
காலத்தின் கோலம்போம் ஆனாலும் எம்
       குலமறவர் புலிவீரர் சரிதம் போமோ!

பூக்காட்டுப் பந்தலிலே ஊரார் சூழப்
       புகுந்தமனக் காளைக்கு மாலை சூட்டி
நோக்கிடுவாள் அவன்விழியைக் காளை அன்பே
       நாம்அப்பா அம்மாவாய் ஆவோம் என்பான்
தூக்கிவிளை யாடற்குக் குழவி தானே
       வேண்டுவது? சுமந்திடுவேன் என்னும் பெண்கள்
சாக்காட்டில் விடுதலையை விளைக்கக் குண்டை
       அடிவயிற்றிற் சுமந்துகளம் சென்றார் கண்டோம்!

முத்துமணி மண்டபத்தே வதுவை காண
       முறையாக நாள்வைத்துக் காத்துப் பின்னர்
மெத்தையிலே மெல்லியல்தோள் தழுவி இந்த
      மேதினியீர் சொல்லுகவே நெஞ்சம் கொண்ட
குத்துவிளக் கனையாள்பால் குடிக்கும் இன்பப்
       பாலின்மேற் சொர்க்கம்தான் பெரிதோ என்னும்
பத்திரண்டு பருவத்துக் காளை தன்னைப்
       பலியாக்கி நமக்காக உயிரை ஈந்தான்!

ஈகத்தின் வார்ப்பவர்கள் பொதியிற் குன்றின்
       ஈடிணையில் சந்தனங்கள் இளமை என்னும்
வேகநதி தனிற்பாய்ந்து நீந்தி மூழ்கிச்
       சுகங்காணும் பருவத்தை நெய்யாய் ஈந்தே
ஆகுதிக்கண் புகழ்மகளைத் தழுவிக் கொண்ட
       அருஞ்சுடர்கள்! புவிவிட்டு எம்மைக் காக்க
போகியநாள் போற்றிடுவோம், தமிழர் மண்ணின்
       மாவீரத் தெய்வங்காள் வாழி! வாழி!


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்