நச்சுயிரி கொண்டுவரும் AIDS

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
 மெய்க்குழநோய், உயிர்க்கொலைநோய், வலியுருக்கி என்கும்
       மேவுமுயிர் பறித்துடலை அசுணமெனத் தாக்கும்
'எய்இட்ஸ்' என்னுமொரு இசைந்தவுயிர் போக்கும்
       இற்றையுல கஞ்சவரும் நுண்கிருமி யாகும்!
மைஉலகில் மருண்டநி லப்பரப்பு மாந்தர்
      வண்ணஉடல் மீதூறும் நச்சுயிரி தன்னால்;
எய்துநிலை நூற்றுக்கு எண்பதெனச் சாற்றி
       இயலோடும் ஆய்வறிக்கை இட்டனர்தாம் அறிவீர்!

புற்றாக்கும் வன்நோயாற் பீடித்தார் போலும்
       போராடி வருகின்ற பெருமிடிபோல் இன்னும்
பற்றாளைக் கூடிவரப் பசுமேனி கொல்லும்
       படவசுணம் போலாகும் பறித்துயிரைப் போகும்!
விற்றுடலைக் காவுமொரு விலைபேசும் மாது
       விசக்கிருமி தன்னையிது வியாபாரஞ் செய்வாள்!
சுற்றாடல் மனைமகளிர் செல்வமெனும் பிள்ளை
      சேர்ந்தழிய இரத்தமெனச் சுற்றிவரு மாமே!

பொதுவாக மனிதனுறும் விந்தொடுமார் மோகப்
       புணரிவாய்தி றந்துவரும் திரவமொடுந் தாய்ப்பால்
மெதுவாகக் கிருமியொடும் விரைந்தருந்தச் சேரும்!
       மெய்க்குழல்நோய் சேருவகை விண்டுவருங் கேளீர்!
மதுவேற்றும் ஊசியொடும் வைத்தியச்செங் குருதி
        வாரோடும் படிமாறத் தேடிவரும் நச்சாம்!
புதுவாதை எதிர்சக்தி செயலிழந்து போகின்
        போட்டழிக்கும் கிருமிவிசம் ஈதென்ப தறிவாய்!

இருபத்தி ஐந்துவய தானவர்கள் வேகம்
       இணைந்துவிடும் பாலியலில் இருக்கின்ற தாகம்
சருகிற்தீ பற்றுகின்ற சார்பினொடும் நல்ல
        சஞ்சாரி மென்னுடலைத் தேடாத போதும்
பெருகிப்போய் நச்சுயிரி புகுந்தழிக்கும் என்றே
        பொன்மொழியாய் நல்லறிஞர் பேசநின்றார் கேண்மின்!
உறுங்காப்பு இல்லாத இன்பமென வேண்டாம்!
        ஒருவனுக்கு ஒருத்தியென எழுதிவிடு வாயே!
  

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்