மரமா? வரமா?    

கவிஞர் இனியன், கரூர்

ழைக்கூத் தாடி காட்டுகின்ற
   கண்கவர் வித்தை பணமாகும்- கடும்
உழைப்பின் வழியே உயர்வென்று
   உணரா மனிதன் பிணமாகும்!

பிழைக்க நூறு வழியிருக்கும்
   பின்னால் படுத்தும் தெரிந்துகொள்- நீ
உழைத்துச் சேர்ப்பது மட்டுந்தான்
   உடம்பில் ஒட்டும் புரிந்துகொள்!

வியர்வை சிந்திட பூட்டுடைத்து
   வீட்டில் திருடல் உழைப்பாகா! -நெஞ்சில்
பயமில்  லாமல் ஆள்கடத்திப்
   பணத்தைப் பறித்தல் உழைப்பாகா!

அயர்ந்து தூங்கும் போதினிலே
   அவர்பொருள் அடித்தல் உழைப்பாகா! -பாரில்
உயர்ந்தோர் சொன்ன அறவழியில்
   உழைத்தல் சிறந்த உழைப்பாகும்.

சுறுசுறுப் பாக உழைக்காமல்
   சும்மா கிடக்க  கல்லா நீ?- வரப்பில்
விறுவிறு வென்று வளர்ந்தாலும்
   வீணில் மிதிபடும் புல்லா நீ?

என்றும் எங்கும் செல்லாமல்
   ஏங்கி நிற்கும் மரமா நீ? – இல்லை
குன்றென எழுந்து உழைப்பதற்குக்
   குலத்தில் உதித்த வரமா நீ?
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்