இலக்கை அடைய இனிமுயல் வாரே! 

கவிஞர் இனியன், கரூர்ளரிளம் சிறுமியர் வகைவகை யான
இளமைக் கனவில் இன்புற் றிருப்பர்
கண்டது காட்சி கொண்டது கோலம்
கண்டதை எண்ணிக் கருத்தழி வார்கள்
வளரிளம் சிறுவர் வயதில் என்றும்
இளமைக் குறும்பு இயல்பாய் இருக்கும்
கண்டதைக் கிறுக்கி கவிதை என்பர்
உண்பதை மறுத்து உறங்கிடு வாரே!

பள்ளி வயதில் கொள்ளும் காதல்
பாலினக் கவர்ச்சி பிறிதொன் றில்லை
பள்ளி வயதில் காதல் கொள்ளல்
கொள்ளி யால்தலை வாரல் ஒக்கும்.
பள்ளிப் பருவம் துள்ளும் பருவம்
கொள்ளி நெருப்பாம் காதலில் சிக்கி
பெற்றோர் வருந்தி பெருந்துயர் எய்த
கற்றலில் தாழ்ந்து கதிகலங் குவாரே!

பள்ளிசெல் வயதில் காதல் தீது
காதல் செய்யின் மோதல் நிகழும்
மோதலின் பின்னே சாதலும் உண்டு
ஆதலால் பள்ளிக் காதல் தவறே!

அவர்களை அழைத்து அருகில் அமர்த்தி
தவத்தொடு மூச்சுப் பயிற்சி யளித்து
இலக்கை அடைய இதுவழி என்றிட
இலக்கை அடைய இனிமுயல் வாரே!

   

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்