எல்லாம் எமக்குள்

ஆங்கில மூலம்: 'ஓட்'
(ODE)

கவிஞர்: ஆர்தர் வில்லியம் எட்கர் ஒ சாஃநெஸி

தமிழாக்கம்: பேராசிரியர் ச.சந்திராஉலகமெனும் மாமேடையில் யாம் இசைக் சக்கரவர்த்திகள்
கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவிய நாயகர்கள்
ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம்!
எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடையருகே
வேதனையும் விரத்தியும் தவிர இப்பூவுலகம் எதை எமக்கு அள்ளித் தந்தது?

வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல்கொண்டு வெம்மை ஒளி வீசுகிறதே!
எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்
எம்போன்ற கவிஞர்களால் அல்லது வேறு எவரால் நிகழும்?

சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்
மண்ணுலகில் மாநகரங்கள் முளைக்கும், தழைக்கும்!

எம் வரையரையற்ற கற்பனை இராஜாங்கத்தால்
மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும்!

எம் வானவில் நிகர் வார்த்தை ஜாலங்களில் உள்ளது
பேரரசுகளின் எழுச்சியும் எதிர்பாரா வீழ்ச்சியும்!

எங்களின் ஒருவன் மனதுவைத்தால் மணிமகுடம் சாயும்!
எம் புத்தம்புது கீதத்தின் நாவசைப்பு மகுடத்தில் மாணிக்கத்தைப் பதிக்கும்!

மண்ணில் புதைந்தாலும் புதைத்தாலும் மீண்டெழும் எம்குலம்
காலச் சக்கரச் சுழற்சியில் என்றுமே சிக்கித் தொலையாது!

எம் ஒரு கண நேர கற்பனைச் சிறகடிப்பில்
விண்ணுக்கும் மண்ணுக்குமாக மலர்ஏணி அமைப்போம்!

எங்கள் எழுதுகோல்கள் அழிவுக்குப் பிரியா விடை கொடுக்கும்!

புதுமைக்கும் பழமைக்கும்கூட பாலம் கட்டும் பாக்களினால்
முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசிகளே யாம்!
நாகரிகத்தின் கருவறை மட்டுமல்ல, கல்லறையும்தான் எங்களால் என்பதில் ஐயமுண்டோ?

கவிஞர்களின் தூயசுவாசங்கள் மட்டுமே நிர்ணயிக்கின்றன
பூலோக வம்சாவளிகளின் வரவுகளையும் செலவுகளையும்!

எம் கற்பனை எல்லை விண்ணை முட்ட அழகற்றவை அர்த்தப்படுத்தபடும்
இருக்கின்றவை அதிசயப்படுத்தப்படும், இல்லாதவை நிரூபணம் செய்யப்படும்,

அரண்மனைவாசியானாலும் சரி அகிலத்தின் கடைகோடி வாசியானாலும் சரி
வானமெனும் கூரையின்கீழ் வாழ்வெனும் சமுத்திரத்தில் தத்தளிக்கும்போது
எம் கனவுகளின் ஊர்வலங்களே அவர்தம் நிகழ்கால நகர்தலுக்கு
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டும் என்பது என்றேனும் பொய்க் கூற்றாகுமோ?.

 

neraimathi@rocketmail.com