ஓன்றுபட்டால் வாழ்வு வரும்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா, கனடா

செந்தமிழா துயில்கலைத்துச் சிந்தித்துன் நிலைபாராய்!
சிந்துவெளி நாகரிகம் சிதைந்தபடி போனதைப்பார்!
முந்திவந்த மூத்தகுடி முடங்கிக் கிடப்பதைப்பார்
மந்தையிலும் கீழ்நிலையாய் மானமின்றி வாழ்வதைப்பார்!

பங்காளிச் சண்டையிலே பகையாளி நுழைந்ததனால்
கங்கைவென்று ஆண்டவர்கள் கால்தடுக்கிச் சாய்ந்ததைப்பார்!
சிங்கமென வாழ்ந்தவர்கள் சீரழிந்து போனதைப்பார்!
மங்காத மாவீரம் மண்டியிட்டு வீழ்ந்ததைப்பார்!

நம்நாட்டிற் தமிழ்பெரிதும் நலிவடைந்து போவதுவோ?
அம்மாவென் றழைப்பதற்கே அருவருப்புக் கொள்வதுவோ?
எம்மொழியை நாம்மறந்து ஈனமுற்று வாழ்வதுவோ?
செம்மொழியாய் வாழ்ந்தமொழி செத்துவிழப் பார்ப்பதுவோ!

யாதுமெம தூரென்றோம் யாவருமெம் கேளிரென்றோம்!
ஏதுமொரு ஊருமின்றி ஏதிலிக ளானதென்ன?
போதுமிந்தத் தாழ்வுநிலை! பொறுத்திருக்கக் காலமில்லை!
மோதிவிழும் கடலலையும் முடிந்ததென்று நிற்பதில்லை!

விரித்துவைத்த கைவிரலால் வேலையென்ன செய்திடலாம்?
பிரித்தவிரல் சேர்த்துவைத்தால் பெரும்பலத்தைப் பெற்றிடலாம்!
சரிந்தநிலை மாறிவரும், சரிநிகராய் மாண்புவரும்,
உரிமைபெறும் நாளும்வரும், ஒன்றுபட்டால் வாழ்வுவரும்!
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்