கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்

கவிஞர் வித்யாசாகர்




தோ..
இப்போதுதான்
நீ இங்கிருந்துச் செல்கிறாய்,
வேறென்ன செய்ய
நான்வந்த கால்தடத்தையும்
உனக்கென விட்டுச்செல்கிறேன்,
நாளை இங்கு மழை வரலாம்
காற்று வீசலாம்
காலங்களும் மாறிப்போகலாம்,
நமக்கு மட்டும்
நீ அங்கு இருந்ததாகவும்
நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை
நம் மனதிரண்டும் –
சுமந்துக்கொண்டே திரியும்...
மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்
மோகினி என்பார்கள்
நம் பேச்சைக் கேட்டு -
அசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,
அந்தக் கால்தடங்களிலிருக்கும் நம்
மனதை மட்டும் யாருக்குமே தெரியாது..
--------------------------
2
நான் வரும்போதெல்லாம்
உனக்காக ஒரு
மலர் வாங்கி வருவேன்
நீ எனைக் கண்டிராத இடத்தில்
அந்த மலர்களை
விட்டுச் செல்வேன்
மலர்களை தாண்டிச்
செல்வாய் நீ,
உனக்கந்த மலர்கள் அழுவதாக
சத்தம் கேட்டிருக்கும் போல்;
நீ திரும்பிப்
பார்ப்பாய்,
சற்று தூரம் சென்று
மீண்டும் மீண்டும்
அந்த மலர்களைப் பார்த்தவாறே போவாய்..

மலர்களும்
மெல்ல அழத்துவங்கும்..

அந்த மலர்களுக்குத் தெரியும்
உன்னையும் என்னையும்
-------------------------------
3
புத்தகத்துள் வைக்கும்
மயிலிறகினைப் போலவே
மனதிற்குள் வளர்ந்துவிட்ட
மாயர்கள் நாம்..
இந்த மண்ணிற்குத்தான்
மயிலிறகும் மறந்துப்போச்சு
மல்லிகை முற்றமும் பழசா ஆச்சு (?)
இனி காதலித்தாலென்ன
யாரை யார் மறந்தாலென்ன
நீ எல்லோரையும் போல் யாரையேனும்
மணந்துக்கொள்
நானும் எங்கேனும் நான்கு சுவற்றிற்குள்
யாரோடேனும் உயிர்த்திருப்பேன்
ஒருவேளை எப்பொழுதேனும்
உன்னை நினைத்துக்கொண்டால் நானும்
எனக்காக நீயும்
அழாமலாப் போவோம்?
அப்போதுச் சிந்தும் கண்ணீரால்
சபிக்கப்படட்டுமிந்த பூமி;
நீ போ
அதோ போகிறார்கள் பார், எத்தனையோப் பேர்
அவர்களோடு போ..
அவர்களும்
அப்படித்தான்;
நம்மில் நிறையப்பேர்
அப்படித்தான்;
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்!!



 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்