புதிதாகப் பிறப்போம்!

கவிஞர் மாவிலி மைந்தன், கனடா

ருகின்ற புத்தாண்டு மலரட்டும் இனியதொரு
       வளமான ஆண்டாகவே!
கருவாகி உயிராகி மானிடம் உலகெங்கும்
       கனியட்டு மொன்றாகியே!
அருகட்டு மில்லாமை அணையட்டு மறியாமை
       ஆளட்டும் சமநீதியே!
பெருகட்டு மன்பெனும் பெருவெள்ளம், புதிதாகப்
       பிறக்கட்டும் சமுதாயமே!

மதங்களைப் போற்றுவோர் மனிதரைப் போற்றட்டும்
      மாநிலம் உயர்வெய்தவே!
நிதம்வரும் அவலங்கள் நீங்கட்டு மகிலத்தில்
       நிம்மதி தழைத்தோங்கவே!
பதவியும் பட்டமும் பெறத்தேடும் பறவைகள்
       பறக்கட்டும் பணிதேடியே!
உதவிக்கு நீள்கின்ற கரங்களின் எண்ணிக்கை
       உயரட்டு முலகெங்குமே!

வித்தாகும் களைகளை விளைகின்ற முன்னமே
      வேறாக்கி நீக்கிவைப்போம்
முத்தான கொள்கையை முற்போக்கு எண்ணத்தை
      முன்னேறும் வழியாக்குவோம்
சொத்தான சொந்தங்கள் சூழ்ந்துள்ள உறவுகள்
       சுமையல்லச் சுகமாக்குவோம்
புத்தாண்டு பிறக்கின்ற பொழுதன்று நாமெலாம்
       புதிதாகப் பிறப்பெய்துவோம்!
 


  

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்