புத்தாண்டே வருக

கவிஞர் குமுளன்

புத்தெளில் தந்தெம்மை பூரிக்க வைத்திடவே
புத்தாண்டே புன்னகைத்து புவிபோற்ற வந்திடுவாய்
புத்திகெட்ட மன்பதைக்கு புத்திதான் புகட்டிடவே
பத்திவெள்ளம் பரந்தோட வந்திடுவாய் புத்தாண்டே!

வளமெல்லாம் வனப்புடனே வளர்ந்தோங்க வைத்துநீ
வளமாகநாம் வாழவழிகாண வல்வினைகள் கைக்கொள்ள
வளம்பெருக்கி வரம்நல்கி வாயார வாழ்த்துரைக்க
வளமார் புத்தாண்டே வந்திடுவாய் எம்மிடத்தே!

ஊருராய் உறவுகளும் உலகெங்கும் உன்னதமாய்
ஊராரும் உடனிருந்தே உற்சாகம் கொண்டிடவே
ஊர்போற்றும் உண்மைகளை உளத்தினிலே விதைத்திட
ஊர்ந்தேனும் வந்திருந்து ஊக்கந்தா புத்தாண்டே!

ஆண்டுக்கொரு முறைநீ அடியெடுத்து வைத்தெம்மை
ஆண்டுஒன்று எம்மோடு இருந்து உளமார எமைவாழ்த்த
நீண்டு ஒலியெழுப்பி நீராய் உருக்கியெம் உளமனைத்தும்
நீண்டு மகிழ்வெல்லாம் நிலைத்திடவே வாநீ புத்தாண்டே!

வெண்பனியில் நாமிங்கு வெண்ணை மிதப்பதைப்போல்
வெண்மை நிலைத்திடவே வெள்ளையுளம் பெற்றிடவே
உண்மை உயர்வுறவே உழைப்பால் எமையுயர்த்த
உண்மை உன்வரவால் உயரட்டும் புத்தாண்டே!

கல்நெஞ்சம் படைத்தாரை காரிருளில் ஓட்டிவிடு
கல்நெஞ்சம் கனிந்திடவே கருணைதான் தந்துவிடு
நல்நெஞ்சம் அவருக்கு நினைவில் நவின்றுவிடு
நல்நெஞ்சம் கொண்டிங்கு வாராய் புத்தாண்டே!

துன்பம் துயரமெல்லாம் தூய்மை வெளியினிலே
துன்பம் அணுகாமல் துடைத்தெறிந்து பாரினிலே
இன்பம் இயைந்திடவே இனித்தே வந்திடுவாய்
இன்பம் உன்வரவால் இருப்பாய்த்தா புத்தாண்டே!

உலகெலாம் உன்னதமாய் உன்மத்தம் கொள்ள
உலகோர் உனைவாழ்த் உன்மனம் போற்றிநிற்க
உலகினிலே உறுபசியைப் போக்கிடவே இன்புடனே
உலகிற்கே விரைந்து உறவாடவா புத்தாண்டே!

பாரினிலே பற்றிப் படரும் பிணிகளெலாம்
பாரினிலே இல்லாது ஒழித்திட நின்னுள்ளம்
பாருக்குள்ளே பிணிப்பூதம் பார்த்து மாய்த்திடவே
பாருக்கே தந்துவிட ஓடோடிவா புத்தாண்டே!

சாதிசமயப் பேதங்கள் சாடியழித் திங்கு
சாதிச்சண்டை சமரசமாய் ஆக்கிவைத்து
பாதியுலகினிலே பரிதவிக்கும் மக்களுக்கு
பாதிப்பைத் தவித்து அமைதிதரவா புத்தாண்டே!

உலகோர் ஒருகுடைக்கீழ் உன்னதமாய் வாழ்ந்திட
உலகோர் நிலையுணர்ந்து உலகர் மலைப்பெய்த
உலகநன்மை உவப்புடனே உவந்தளிக்க ஓடிநீ
உலகுக்கே விரைந்தே வந்திடுவாய் புத்தாண்டே!

இன்னும் தாமதமேன் இரவோடிரவாக ஓடித்தான்
இன்புறவே வாராயோ என்னுளத்துக் கற்பனையில்
இன்பம் என்றும் இனித்திருக்கக் கனவாய்க்
இன்பம் ஊட்டிடவே விரைந்தேவா புத்தாண்டே!
 

  

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்