சர்வதேச வாலிபர் தினம்

கவிஞர் முருகேசு மயில்வாகனன்

நாட்டின் முதுகெலும்பாம் நல்லிளைஞர் மேம்பாடு
வாட்டமின்றிக் கல்விகற்றே வாடிடும் - நாட்டிற்காய்ச்
சேவைகள் செய்து செருக்கோ டிருப்பவர்கள்
நாவடக்கல் நல்வழியாம் நன்று.

கற்க கசடறக் கற்றவற்றின் நற்பயனை
உற்ற பொழுதில் உறுதியுடன் - கற்போர்க்கு
நல்வழி காட்ட நயப்புடன் கற்பிக்க
அல்வழி எல்லாம் அகலும்.

ஊக்கமுள்ள வாலிபர்க்கு உற்சாகம் என்றுமுண்டே
தாக்கமிலா வாழ்வுமே தப்பாது – வாக்குத்
தவறாதே தற்றுணிபும் ஓங்கிடத் தாழ்வு
இவர்க்கென்று மில்லையே ஏற்பு.

நல்லறிஞர் சேர்க்கை நலிவின்றிப் பெற்றிட்டால்
வல்லவராய் வாழ்வில் வலிமைசேர் – நல்லவராய்
நாட்டின் தலைவராய் நல்வழி காட்டிட
வேட்பாய் வளருமே நாடு.

வாலிபர்கள் நாட்டின் வலிமைசேர் சொத்துக்கள்
போலிகளைக் கண்டறிந்தே பொய்யகற்றும் - ஆலிலைவாழ்
நாயகன்போல் ஆற்றலுடன் நாடாள் தலைவனை
வாயதிர வாழ்த்துகின்ற வாய்ப்பு.

நல்ல குருநாடி நன்றாகக் கற்றுவந்தால்
சொல்லாற்றல் மிக்கவராய்ச் சோர்வின்றிச் - செல்லிடம்
எங்குமே சீர்பெற்று ஏறுநடை போடுதற்கு
பங்கந்தான் ஏதுமில்லைப் பார்.

முன்னேற்றங் காண முயற்சிகள் செய்திடுவர்
பின்னோக்கிப் பாராது பேதமின்றி – நன்னோக்காய்
'யாதுமே ஊராக யாவருமே கேளீராய்'
மோதலின்றி வாழ்தலே மேல்.

வாலிபர்கள் நாட்டினை வாழவைக்கும் சொத்துக்கள்
காலித் தனஞ்செய்வார் கண்ணியமாய் - போலிகளை
ஏற்காத ஏஞ்சல்கள் ஏற்றமுறு தொண்டர்கள்
ஊற்றாகக் கொண்ட கொடை.

நினைத்ததைச் செய்யவும் நீதிகாக்கும் கொள்கை
முனைப்போடு வேலைகளை முன்பே – வனப்புடன்
சிந்தித்துச் செப்பமாகச் சீக்கிரம் செய்திடும்
சிந்தனைச் சிப்பிகளின் சீர்.

இளைஞர் சமுதாயம் இன்றுநேற்று என்றும்
வளைந்து கொடுக்காத வல்லோர் – தளர்வறியா
வாலிபர்கள் வாழ்விலே வாய்ப்பதிகம் பெற்றவர்கள்
சோலிகள்கண் டஞ்சாச் சுடர்.
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்