தமிழரென்று தலை நிமிர்வோம்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடாலைநிமிர்ந்து தமிழரென வாழ்ந்தோம், பின்னே
       தாழ்வுற்றுத் தலைகுனிந்து வீழ்ந்தோம், அந்த
நிலைமாற்றித் தலைவனெமை நிமிரச் செய்தான்!
       நீண்டநா ளக்காலம் நிலைக்க வில்லை!
குலைத்தெறிந்த மாலையென ஈழம் தன்னைக்
       குதறியெங்கும் வீசியதே குரங்குக் கூட்டம்!
விலைபோனோர் வஞ்சனைக்குத் துணையாய் நிற்க
       மீண்டுமெங்கள் தலைகுனிந்து தாழ்ந்த தம்மா!

பிள்ளைக்கோர் ஆபத்து வந்த தென்றால்
       பெற்றதாய் போர்க்கோலம் கொள்வா ளன்றோ!
பிள்ளைகளோ கையேந்தி நின்ற போது
       பெற்றவளும் செயலற்றுப் பார்த்து நின்றாள்!
பள்ளத்தில் வீழத்;திவிட்ட ஊழ லென்றும்
       பகட்டினிலே சிறைவைத்த சினிமா வென்றும்
உள்ளபடி உரிமையற்ற ஆட்சி யென்றும்
       ஒன்றல்ல விலங்குபல தாயின் கையில்!

தமிழனென்று சொல்கின்ற நிலையின் றில்லைத்
       தலைநிமிர்ந்து நிற்கின்ற பெருமையில்லை!
திமிர்கொண்டு பதவிக்கும் தலைமைக் கென்றும்
       திரிகின்ற திருடர்தாம் நிறைந்து விட்டார்!
அமிழ்தான மக்களது ஆட்சி வெட்கும்
       அசிங்கமாய் ஆகிவிட்ட அவலம் சூழ
நிமிர்கின்ற நிலைதாய்சேய் நிலத்தே யில்லை
       நேராகத் தலைநிமிரும் தகுதி யில்லை?

பண்டையநம் முன்னோரின் வரலாற் றைநாம்
       படித்துவிட்டாற் போதாது, படைக்க வேண்டும்!
கண்போலக் காத்துவைத்த இலக்கி யங்கள்
      காட்டிவைத்த கருத்தோடு ஒழுக வேண்டும்!
மண்ணுலகம் போற்றுமற நூல்கள் தந்த
       மரபுவழி பயணித்து வாழ வேண்டும்!
விண்ணெட்டும் புகழ்மீண்டும் மலர வேண்டும்!
     வீறுடனே தமிழரென நிமிர வேண்டும்!
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்