தைமகளாள் வருகிறாள்

கவிஞர் முருகேசு மயில்வாகனன்



தைமகளாள் வரவிற்காய்த் தயக்கமுடன் காத்திருக்க
ஓய்ந்திருந்த காலநிலை உறுமியே ஆர்ப்பரிக்க
காய்ந்திருந்த நெல்மணிகள் கதிரோடு நீரமிழத்
தூய்மனத்தாள் வந்தாளே துர்க்கா துரந்தரியாய்

விருந்தோம்பல் மிக்கவர்கள் வீரமிகு செந்தமிழர்
வருவிருந் தோம்பியே வாய்ப்பாகப் பொங்கலிட்டே
திருவுடைய தைமகளைச் சிறப்பாக வரவேற்று
பெருவிருந் தளித்தே பெருமைகொள்ள வைப்போமே.

காலமெலாம் சேற்றினிலே கால்வலிக்க உழகை;கின்ற
சீலமுடைக் கமக்காரர் சிறப்பாக மக்களுக்குச்
சாலிமுதல் பல்லினத் தானியங்கள் பயிர்செய்
சீலர்கட்கு நன்றிசொல்லும் சிறப்புமிகு திருநாளே.

கமக்காரர் மட்டுமல்ல கமத்தொழிற்கு உதவிசெய்யும்
விமலன் ஒளியூட்ட விரைந்துவரும் சூரியர்க்கும்
அமுதமாம் பால்சுரக்கும் ஆவினங்கள் மாரிக்கும்
சமநோக்காய்ப் பொங்கலிட்டுச் சமர்ப்பிக்கும் திருநாளே.

செங்கரும்புச் சர்க்கரையோ செவ்விளனி மாங்கனியோ
எங்குமே கிடைக்கலையே என்னதான் செய்வதுவோ
பொங்கலுக்குத் தேவையான பொன்னி அரிசியெங்கே
அங்கமாம் பழம்பாக்கு ஆவின்பால் அருகியதே.

உயிருடன் உடல்வாழ உணவளிக்கும் உத்தமர்க்கு
வயிறார உணவில்லை வழிவழியாய் வந்தநிலம்
பயிர்செய்ய முடியாதே பாராள்வோர் கெடுபிடிகள்
துயில்வதற்கு இடமமேது துன்பத்தின் விளிம்பினிலே.

பிறக்குமிந்தத் தையினிலே பேதலிப்பு மக்களுக்கு
அறவழியில் வாழ்ந்தவர்கள் அன்புருவாய்க் கொண்டவர்கள்
சிறப்பாக வந்தவரைச் சீராக உபசரித்தே
கரங்கூப்பி வழியனுப்பும் கண்ணியம் மிக்கவரே.

காலையிளம் பரிதியின் கவினொளிர் காணுமுன்னே
வாலைக் குமரிகளும் வாழ்வளிக்கும் தாய்மாரும்
வேலைகளைச் செய்வதற்காய் விளித்தெழுந்தே தம்பணியைச்
சீலமுடன் செய்துவப்பர் சிறப்பாகப் பொங்குதற்கே.

முற்;றம் மெழுகியே முறையாகக் கோலமிட
உற்ற பொழுதினிலே ஊரெழவே வெடிகொழுத்தும்
சற்புத்தி ரர்களின் சாதனைகள் ஒருபுறமும்
குற்றம் குறைபோகக் கோமய நீர்தெளிப்பர்.

பிள்ளையார் பிடித்துவைத்தே பூசைகள் செய்தபின்னர்
மௌ;ளவே பானையை மூன்றடுப்பில் ஏற்றுதற்குத்
தள்ளாதே தந்தையரைத் தானழைத்தே அவர்க்காம்
உள்ள பணியென்றே உறுதிபடச் சொல்லிடுவர்.

அன்னையின் தலைமையிலே ஆரவாரப் பொங்கலாமே
உன்னத பொங்கலை உரிமையுடன் சேர்ந்தொன்றாய்
தன்னுணர்வு மேலோங்கத் தாழ்வின்றி வாழ்வுயர
பொன்னான நாளிதனைப் போற்றி மகிழ்வோமே.

செங்கரும்பும் சர்க்கரையும் சேர்த்தரிசி பயற்றுடனே
பங்கமிலா முந்திரி பால்நெய் கஜுகலக்க
இங்கிதமாய்ப் பொங்கியே இரவியின்முன் படைத்தே
எங்கும் மகிழ்ச்சியுற எல்லோர்ககும் கொடுப்போமே.

சுற்றத்;தார் பரிமாற்றம் சூழவுள்ள ஆலயத்தில்
பற்றுடனே சென்றங்கு பாசமுடன் பொங்கிடுவோம்
குற்றங் குறைபோக கோமாதா பொங்கலுமே
உற்ற பொழுதினிலே உற்றுணர்ந்தே செய்திடுவோம்.
 





 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்