தை வரட்டும்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
 காலையிளம் காற்றலையும் கடல்மலையும் நமக்கெனவே!
சோலைவனம் வாவிவயல் சுனைஅருவி நமக்கெனவே!
மாலையிலே வானெழுதும் வண்ணமெலாம் நமக்கெனவே!
கோலநிலாத் தென்றலெனக் கோடிசுகம் நமக்கெனவே!

உதிக்கின்ற செங்கதிரும் உயர்வானும் நமக்கெனவே!
கொதிக்கின்ற வெம்பகலும் குளிரிரவும் நமக்கெனவே!
நதிநீரும் செடிகொடியும் நறுமலரும் நமக்கெனவே!
புதிதாகத் பிறக்கும்தைப் புத்தாண்டும் நமக்கெனவே!

பொய்யல்ல இப்பிறவி மெய்யென்று தமிழுரைக்கும்!
கையிரண்டு பெற்றதெலாம் கடமைசெய எனவுணர்த்தும்!
செய்கின்ற செயலொன்றே சிலையாக எமைநிறுத்தும்!
தையொன்று பிறந்தாலே தமிழர்க்கு வழிபிறக்கும்!

நீர்சுமக்கும் கார்முகிலே நிறங்காட்டும் வில்படைக்கும்
ஏர்சுமக்கும் ஏழைகரம் எல்லோர்க்கும் உணவளிக்கும்
தேர்சுமக்கும் சக்கரமே தெருவலத்துக்(கு) அதையிழுக்கும்
ஊர்சுமக்கும் நெஞ்சினுக்கே உயர்வுதனைத் தைகொடுக்கும்!

நாளொன்று விடிந்துவர நம்பிக்கை ஒளிவிடட்டும்!
தூளென்றே துன்பமெலாம் துடைத்தெறியத் துணிவெழட்டும்!
வீழுகின்ற நிலைவரினும் மீளுகின்ற பலம்வரட்டும்!
நீளுகின்ற மகிழ்ச்சியினை நிலைக்கவைக்கத் தைவரட்டும்!
  

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்