தமிழர் விழாப் பொங்கல்

கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்

 

நீண்ட காலம் தமிழரினம்
நெஞ்சம் மகிழ்ந்து இயற்கையினை
வேண்டி எடுக்கும் விழாப்பொங்கல்! – சேர்ந்து
விருந்து படைக்கும் விழாப்பொங்கல்!!

நன்றி கூறும் விழாப்பொங்கல்!
நாடு தோறும் வாழ்தமிழர்
ஒன்றி எடுக்கும் விழாப்பொங்கல்! - அதனால்
உலகத் தமிழர் விழாப்பொங்கல்!!

இயற்கையை மனிதன் வசமாக்கி
இணைந்து ஆற்றும் பணிகள்தான்
வியக்கும் சாதனை பலதந்து – உலகில்
வெற்றிகள் கிட்டச் செய்துளது.

முயற்சி என்றும் மனிதர்க்கு
முடிவில் நற்பயன் தருமதுதான்
இயற்கை நியதி என்றுணர்த்தும் - உழவர்
இனிய பொங்கலை வாழ்த்திடுவோம்!

தையது வந்தாற் துயர்யாவும்
தங்கா தோடிப் போகுமென்று
வையகத் தமிழர் விடிவுதனை – நம்பி
வருடந் தோறும் தேடுகிறோம்!

தேடும் விடிவைத் தருமாண்டாய்
திடமாய் ஏற்றிதை நம்பிடுவோம்!
ஓடும் துயர்கள் எனநம்பி – அந்த
ஒளிக்கீற் றைநாம் எதிர்பார்ப்போம்!!

முன்னின் றுழைக்கும் தலைவர்கள்
மோதி நாளை ஓட்டாமல்
எண்ணித் துணிந்து செயலாற்றி - இங்கு
எமக்கோர் விடிவைத் தருவாரா???

காலம் கடக்கு முன்னாலே
கைகளைக் கோர்த்துச் செயற்படுவோம்!
ஞாலம் தமிழர் எதிர்பார்ப்பை - உணர்ந்து
நமக்கு வழங்க வழிசெய்வோம்!!
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்