நற்பொங்கல் பொங்குகவே

பாவலர் கருமலைத்தமிழாழன்
 நெஞ்சத்தில் அன்பு பொங்க
நினைவெல்லாம் கருணை பொங்க
வஞ்சகத்தை மாய்த்துப்பொங்கல் பொங்குகவே
வாஞ்சையினை ஏந்திப்பொங்கல் பொங்குகவே !

அறங்களிலே வாழ்வு திகழ
அணைப்பதிலே கரங்கள் திகழ
மறங்களினை வீழ்த்திப்பொங்கல் பொங்குகவே
மணந்தன்னை வீசிப்பொங்கல் பொங்குகவே !

வன்முறையின் துயர்கள் முடிய
வளர்பகையின் வன்மன் முடிய
நன்முறைகள் வளர்த்துப்பொங்கல் பொங்குகவே
நலிவுகளைச் சாய்த்துப்பொங்கல் பொங்குகவே !

சாதிமதப் பிரிவு வீழ
சண்டையிடும் காழ்ப்பு வீழ
வீதியெல்லாம் பொதுமைப்பொங்கல் பொங்குகவே
விளைச்சலெனும் இன்பப்பொங்கல் பொங்குகவே !

ஏழ்மையினை வீட்டி லோட்டி
ஏய்ப்போரை நாட்டி லோட்டி
வாழ்வொளிர வளமைப்பொங்கல் பொங்குகவே
வாழ்த்தொலித்து மங்கலப்பொங்கல் பொங்குகவே !

செங்கரும்பின் சுவை பொழிந்து
செந்நெல்லின் மணி குவித்து
தங்கமகள் தைப்பொங்கல் பொங்குகவே
தரணியெலாம் தமிழ்ப்பொங்கல் பொங்குகவே !
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்