காலம்...

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்

காலம்...

நீரையும்
நிலத்தையும் தந்தது...!

நிலம் தழுவும்
நீரால்

ஓர் அறிவு
உயிரைத் தந்தது-பின்

ஆறறிவாய்
அடுக்கிக் காட்டியது...!

ஆண் பெண்
உறவைத் தந்தது

உறவின்
உயர்வைச் சொன்னது...!

அறிவியல்
ஞானம் தந்தது-எதையும்

அடைவது
எளிதே என்றது...!

வானத்தை
அளக்க வைத்தது

மண்ணுறையும் ஆற்றலின்
மாண்பையெலாம் சொன்னது...!

மண்ணை ஆளச்சொன்னது
பொன்னை அணியச் சொன்னது...!

காலம்...

இதிகாசங்களை இயற்றியது
காவியங்களைப் படைத்தது...!

ஆத்திகம்
நாத்திகம் பேசியது

புரட்சிப் பூக்களைப்
பூக்கச் செய்தது

வஞ்சனையை
வாரிக் கொடுத்தது

வாஞ்சையை
வற்ற வைத்தது

பொறாமையை
நிலைக்க வைத்தது

போரைத்
தொடரச் செய்தது

அறம் மீறி -உயிர்
அறுவடையை உறுதி செய்தது

காலம்...

பசுந்தரையைப்
பாலைவனமாய்க் காட்டியது

ஆழிப் பேரலையின்
அழிதிறனைக் கூட்டியது

காலம்...

அடை மழையைக்
கொடையாக அளித்தது

வனப்பும் வண்ணமும்
வசந்தமும் வழங்கியது

வியப்பூட்டும் நிகழ்வுகளால்
வியனுலகை அலங்கரித்தும்

வறுத்தெடுக்கும் வறுமையின்
வேரறுக்கத் தவறியது...!
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்