ஈழமெங்கள் தாயகம்

புலவர் முருகேசு மயில்வாகனன்

சிந்தும் அழகியாம் சிங்காரச் செல்வியவள்
இந்து சமுத்திரத்தின் ஈடில்லாச் - செந்தூரச்
செம்மதியே சீர்பெரு செம்மனத்தாள் வந்தோரைத்
தம்மவர்போல் தாங்கும் தகமை

தக்கார் தகவிலர் என்றுபாராத் தாயவளோ
எக்காலம் பார்க்காத ஏந்திளையாள் - பக்கபல
மாயிருந்தே நேசிப்பாள் மானிடத்தை மாசின்றித்
தாயினும் சாலப் பரிந்து.

நாவாயில் வந்தெமது வாழ்வையே சீரழித்தே
சீவாதார மாற்றமொன்றைச்; செய்திட்டீர் – ஆவாகனம் (அக்கினிக்குப் பலியிடுதல்)
செய்தே அழித்திட்டீர் எம்மரசின் செப்பமதை
ஐயமின்றிக் கூறுகிறோம் ஆம்

கண்டியோடு யாழ்ப்பாணம் கோட்டையென ஆட்சிமுறை
பண்டைநாள் மூவரசு பக்குவமாய்க்; - கொண்டதிந்த
நாட்டையே கொள்ளையிட நாவாயில் வந்தவர்கள்
தேட்டத்தைப் பெற்றனரே தேர்ந்து.

அந்நியர் ஆட்சி அதிகாரம் ஓங்கிடவே
இந்நாட்டை நாமாழ எத்தனித்தோம் - சிந்தை
சிதறிடாதே சேர்ந்தோமே செப்பமுற ஒன்றாய்
அதர்மம்தான் ஏதுமின்றி அன்று.

விட்டுக் கொடுத்தே விலைமதிப் பற்றஎம்
சிட்டாஞ் சுதந்திரத்தைச் சீக்கிரமே – முட்டின்றிப்
பெற்ற பயனைப் பெருமையுடன் காப்பதற்குப்
பற்றாய்ச் செயற்பட்டோம் பார்.
ஆண்டாமே பத்தொன்பது நாலுபத் தெட்டினிலே
ஈண்டெமக்குத் தந்துசென்றார் ஈழமதை – மீண்டுமிதை
ஆழ்வதற்கு எத்தனித்தே அன்றெம் சுதந்திரத்தை
ஆழ்மனதில் ஏற்றிட்டோம் ஆம்.

மூவினத்தார் சேர்ந்தொன்றாய் முன்னெடுத்த வெற்றியினை
பாவிகள் செய்வினை பாதிப்புத் - தாவிவர
சூழ்நிலை வேறுபாட்டால் சூழும் இனத்துவேசம்
வாழ்வியலைக் கொன்றழிக்கும் வாய்ப்பு.

ஆங்கிலேயர் ஆட்சியின்பின் ஆன சுதந்திரம்
ஓங்கி ஒளிர்ந்திடு மென்றெண்ணித் - தாங்கினோம்
துன்பத்தைத்  தற்காப்புத் துர்வலமாய்ப் போனதனால்
வன்பகைக் காளானதெம் வாழ்வு.

ஈழமெங்கள் தாயகம் இன்றுநேற்று ஆனதொன்றா?
ஆழமாக வேரூன்றி ஐயமின்றித் - தோழர்களாய்
அன்றுதொட்டு இன்றுவரை அன்புடனே வாழ்ந்தவர்க்கு
இன்றங் கிடமில்லை ஏன்.
 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்