சுதந்திரத்தின் அர்த்தமென்ன?

அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்

முன்னைத் தமிழ்த்தலைமை முட்டாளாய் வாழ்பலனாய்
பின்னைத் தமிழினத்தார் பித்தானார் - அன்னையும்
தந்தையும் சொந்தமும் தாமிழந்து எம்மினத்தார்
சிந்துகின்றார் கண்ணீர் சினந்து!

பல்லின மொன்றாய்ப் பரவிய நாட்டினிலே
சொல்லிட வொண்ணாத் துயர்கொடுத்து - கல்லிதயச்
சிங்களச் சிப்பாய்கள் செந்தமி ழீழவரை
சங்காரம் செய்தாரே சார்ந்து!

ஆதியாய் வாழ்ந்தஎம் அன்னைத் தமிழினத்தார்
நாதியற் றோடுகின்றார் நாடெல்லாம் - பாதியிலே
வந்தஇனம் வஞ்சித்து வாழிடங்கள் தாமடக்கிப்
பந்தமிணைந் தாடுகின்றார் பார்!

எழுத்துச் சுதந்திர மேதுமில்லா நாடொன்றில்
கொழுத்த விடுதலைக் கூத்தாம் ! – பழுத்த
அரசியல் வாதிகளும் ஆன்மிகரு மாங்கே
விரசம் விரிவடைதல் வீண்!

காக்கையன் கூட்டமும் கண்முன் தொடருதே
வாக்கை யிழந்தாரோ வண்தமிழர் - போக்கையவர்
முற்றாக மாற்றியே முத்தமிட வைத்திடணும்
பற்றாகச் சேர்த்தினங்கள் பார்த்து!
 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்