ஆதலால் காதல் செய்வீர்!

கவிஞர் மாவிலி மைந்தன், சி.சண்முகராஜா, கனடாதிரவன் ஒளியைப் பெற்றுக்
       கனிதரும் மரங்கள் போல
உதிருமோர் மனித வாழ்க்கை
       உயிர்பெறும் காத லாலே!

கண்கள் காணாத தெல்லாம்
      காதலால் இதயம் காணும்
விண்முட்டும் உயரங் கூடக்
      விரல்தொடுந் தூர மாகும்!

காதலைத் தொட்டுப் பாருன்
      கற்பனைக் குதிரை யோடும்
காதலின் தொடுகை பட்டால்
      கவிதைக ளாறாய்ப் பாயும்!

அன்பினை வாரி யள்ளி
       அளித்துப்பார் ஒருவர்க் கந்த
அன்பேபின் மாரி யாகி
       அருவியாய் உன்மேல் கொட்டும்!

உள்ளத்தில் உவகை பொங்கும்
       உருவினில் மெருகு தங்கும்
கள்ளமில் மனங்கள் கூடிக்
       கலந்திடும் காத லாலே!

காதலால் அனைத்தும் கூடும்
       கருத்துடன் வாழ்வு தோன்றும்
ஆதலால் காதல் செய்வீர்
       அழகென வாழ்வைக் கொள்வீர்!
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்