காதலுக்காகவா?

கவிஞர் குமுளன்

மாமரங்கள் மலர் துளிர்க்கும் யாருக்காக
மாங்கனிகள் மகிழ்வுறவே தருதற்காக
குயிலினங்கள் பாட்டிசைக்கும் யாருக்காக
குதூகலமாம் வேனில் பருவத்திற்காக

மயிலினங்கள் தோகைவிரிப் பதுவும் யாருக்காக
மந்த மாருதத்தின் மழைத்துளியின் வருகைக்காக
மான்பேடை கலையருக மருளுவதும் யாருக்காக
மான்துணையை மறித்துப் பெற்றின்ப் பெறுதற்காக

பாவையவள் பார்வையெல்லாம் யாருக்காக
பாங்குறவே பாவலனின் பதிலுக்காக
கன்னியவள் கருத்தெல்லாம் யாருக்காக
காளையிவன் கருத்தினிலே கலத்தற்காக

பால்நிலவின் பட்டொளியும் யாருக்காக
பாவையவள் பாங்குறவே பார்ப்பதற்கோ
பட்டொழியின் பரிசத்தைப் பெறுதற்காக
பட்டவுடன் பரவசமே அடைதற்காக

மலரினங்கள் மொட்டவிழ்த்தல் யாருக்காக
மங்கையவள் மனங்கனிந்து சூடுதற்காக
மங்கையிவள் மொட்டவிழ்த்தாள் யாருக்காக
மன்னனவன் மனதையெல்லாம் கொள்ளையிட.

மென்மையென மலர்விழிகள் மூடுவதும் யாருக்காக
மெல்லுடலின் மயக்கத்தின் மனதிற்காமோ
நல்லெண்ணக் கற்பனையில் பறப்பதாலோ
மேன்மையுறு காதலனின் நினைவிற்தானோ?

சோலையிலே குயிலினங்கள் கூவுவதும் யாருக்காக
சோர்வில்லா இன்குரலை சோதித்துப் பார்ப்பதற்கோ
சோர்வில்லா இளவேனில் இனிமை சுகத்திற்காக
காலையிலே சேவலினம் கூவுவதும் யாருக்காக
மாலைவரை தொழில் புரிவோன் துயில் வழிப்பதற்கோ

கண்ணும் கண்ணும் பேசுவதும் யாருக்காக
மண்ணளக்கும் மணவினைகள் ஏற்றற்காக
கண்ணழகை கன்னியர் காட்டுவதும் யாருக்காக
தண்ணழகை தரணியிலே விஞ்சுதற்கோ?

பாலனிவன் பாடல்களும் யாருக்காக
பாவையிவள் பார்வையினைப் பெறுதற்கோ
வாலைப் பருவத்து நினைவுகளை மீட்டிடவோ
வாலைக் குமரிதனை வரித்து மகிழ்ந்திடவோ?

கற்பனையில் மிதந்திடுதல் யாருக்காக
எற்றநல் இதயத்தைப பெறுதற் காமோ?
உற்றவனை விழிவீசி மருட்டுவதும் யாருக்காக
உற்றநல் காதலிலே கற்பனையைக் கலப்பதற்கோ!

பருவத்தின் பூரிப்பும் யாரக்காக
பருவத்தே பயிர் நாட்டுதற்கோ
உருவத்தின் உன்மத்தம் யாருக்காக
உருத்தெரியா காதலிலே மிதந்திடவோ?
 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்