தாய்மொழி

கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்

தாய்மொழி என்பது ஒருவனது
தனித்துவம் காக்கும் அடையாளம்!
தாய்மொழி என்பது மாந்தரது
தன்மா னத்தின் குறியீடு!!

மூத்தோர் ஆக்கி நமக்களித்த
முதுமொழி யான தாய்மொழியைக்
காத்துப் பெருமை கொண்டிடுவோம்!
கருத்தில் நிறுத்திப் பேணிடுவோம்!!

கூடி வாழ்ந்த இனக்குழுமம்
குரலால் கருத்தை வெளிப்படுத்த
தேடிக் கொண்ட ஊடகமே
திருந்திப் பின்னொரு மொழியாச்சு!

தாய்வழி தொடர்ந்த அம்மொழியைத்
தாய்மொழி யாக்கிப் பின்வந்தோர்
வாய்மொழி யாக வரித்துவர
வளர்ந்தது தாய்மொழிக் கோட்பாடு!

எங்கே சென்று வாழ்ந்தாலும்
எம்முடன் வந்திடும் தாய்மொழியை
பங்கப் படாது காத்திடுதல்
பாதையைத் தொடர்வோர் கடனன்றோ

காலத் தேவைக் கேற்றபடி
கற்கும் மொழியைக் கற்றிடுவோம்!
பாலம் போன்றதை ஏற்றாலும்
பழம்மொழி தாய்மொழி அதைமறவோம்!

தாயுடன் உறவைப் பேணிடவும்
தன்கதை பிறர்க்குக் கூறிடவும்
ஆயுதம் போன்று கொண்டுவந்த
அழகிய மொழியெம் தாய்மொழியே!
உலகத் தாய்மொழி நாளிதிலே
ஒவ்வொரு மாந்தரும் தம்மொழியைக்
கலகம் தவிர்த்துக் காத்திடுவோம்!
கைகளைக் கோர்த்து மதித்திடுவோம்!!

செம்மொழி என்னும் தகுதியுடன்
செழுமை பெற்ற தமிழ்மொழியைத்
தம்மொழி யாகக் கொண்டவர்நாம்
தாய்மொழி அதனைப் பேணிடுவோம்!!

அந்நிய மோகம் தவிர்த்திடுவோம்!
ஆழத் தமிழைக் கற்றிடுவோம்!!
கண்ணிய மாய்நம் தாய்மொழியைக்
காத்திட உறுதி பூண்டிடுவோம்!
 

 

உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்