நீ வந்தாய்

புகாரி                                                  

கரிகாலன் கல்லணையில்
கசிவு வந்ததைப் போல்
இன்று நீ வந்தாய்

ஏன் வந்தாய்?

வருவாய் என்று நான்
எண்ணியிருக்கவே இல்லைதான்
ஆனாலும் நீ வந்துவிட்டாய்

வா... வா...

உன் வரவால்
அதிர்வதா உதிர்வதா என்று
என் இதயம் பதறியபடியே
சிதறித் துடிக்கிறது

உன்னையும்
இரண்டாய்ப் பிளந்து
என்னையும்
இரண்டாய்ப் பிளந்து
நடுவீதியில் எறிந்துவிட்டுப்போன
கதையை
எவருக்குச் சொன்னாலும்
எதுவும் விளங்கப்போவதில்லை

இப்போது
நீ ஏன் வந்தாய்?

கோமாவில் கிடக்கும்
நினைவுகளுக்குக்
கற்பூரம் காட்ட வந்தாயா

மறதி மருந்துகளைக்
கூட்டிக் குவித்து
கொள்ளிவைக்க வந்தாயா

தார்ப்பாய்க்குள் மூடிவைத்த
உப்புப் பொதிகளைப்போல்
உன்னிடமிருந்து என்னை
பொத்திப் பொத்தித்தானே
பாதுகாத்து வைத்திருந்தேன்

ஒரே நாளில் கரைத்தெடுக்க
எப்படி நீ உள்நுழைந்தாய்

காய்ந்து கிடந்த என் ஈரங்களில்
உடைந்து கிடந்த கப்பல்களை
அத்துமீறிய வெள்ளமாய்ப் புகுந்து
எப்படி மிதக்கவிட்டாய்

ஓட்டைத் தோணியில்
உயரும் நீரைப்போல்
என்னை மூழ்கடிக்க
உன் நினைவுகளைக்
கொப்பளித்துக்கொண்டு
நீ உயர்ந்தவண்ணமாய்
இருக்கிறாய்

கதவடைக்கும்
கோபமும் ஞானமும்
என் இதயத்தின்
வெளியிழைத் திசுக்களில்
கொதிக்கின்றன

உள்ளிழைகளோ
உன்னைக் கண்டு உயிர்பெற்று
கர்வம் துறந்து
கதறி அழுகின்றன

உன் முகம் பார்க்கிறேன்
அன்று கண்ட அதே மந்தாரம்
இன்று என்னை அழவைக்கிறது

என்றும் மாறாமல்
மருளும் உன் பார்வை
என்னை உடைத்து விறகாக்கி
இடம் வலமாய் ஊஞ்சலாடுகிறது

மீண்டும்
அதே பெருமூச்சுகள்
இடைவிடாமல் ஒரு சூறாவளியைச்
சின்னச் சின்னதாய்க் கத்தரித்து
வெளியேற்றிக்கொண்டிருக்கின்றன

உன்னைத் தீண்ட முனையும்
விரல் கொடிகளை
வெட்டியெறிந்து விழி சிவக்கிறேன்

நல்லவேளை
நீ வந்தது என் கனவில்தான்

ஆமாம்...
என் கனவில்தான்

உதிர்ந்துபோன சருகுகளை
ஒட்டவைத்து ஒட்டவைத்து
காலம் கட்டி வைத்திருக்கும்
என் சிறுகூரை
(நிலைத்)திட மனமற்ற
நீ வீசிப்போகும் அணுகுண்டை
இனியொரு முறையும் தாங்காது
தாங்கவே தாங்காது