முனைவர் சந்திராவின் கவிதைகள்

நடுத்தெருவில். . . . . . . . . .

விதை முதல் விருட்சம் வரை
பாரத தேச சொத்திற்கு
உயில் எழுதுகிறது
அன்னிய அரசாங்கம் !

நாட்டின் முதுகெலும்பு
முறிக்கப்பட்டு
நரம்புகள் அறுக்கப்படுகிறது
நவீனம் எனும் ஆயுதம் கொண்டு
,

உழவு மாடுகள் உல்லாசமாய்
பயணம் போகின்றன‌
உயிரிழக்கும்
உண்மையறியாமல்!

பயிர்களோடு
மனிதப் பிணிகளை
சேர்த்தே வளர்க்கின்றன‌
செயற்கை உரங்கள் !

பூச்சிக் கொல்லி ம‌ருந்துக‌ளோ
அணு அணுவாய் உருமாற்ற‌ம்
ம‌னித‌ உயிர்க் கொள்ளியாய்

நில‌ம‌க‌ளின் துகிலுரிக்க‌
துச்சாத‌ன‌னாய்
அறுவ‌டை
இய‌ந்திர‌த்தின் அவ‌தார‌ம் !

மொத்த‌த்தில் விவ‌சாய‌ம்
ந‌வ‌சாய‌ம் பூசிக்கொண்டு
ந‌டுத்தெருவில் ஊர்வ‌ல‌ம் !
 

கண்ணீர் பயணம்
உழவை பாடிய
வள்ளுவன் வாக்கு
வாய்க்காலோடு போனது !
பாரதி வாக்கோ
பாத்தி தாண்டி
பரலோகம் சென்றது !
கல்லணை
கட்டிய காலம் மாறி
கண்ணீர் நதியின்
குறுக்கே கடன் அணை
கட்டும் விவசாயிகள்!


நதிநாகரீகத்திற்கு தாயகமாம் நதி நங்கையே!
நீ அருவித்தாய் மேல் சினம் கொண்டாய்!
பாறை கடந்தாய்! பாதை மாறினாய்!

மண்ணைத் தேடிவந்து முத்தமிட்டு
மணவாளனாக்கி மாலையும் சூடினாய்!
மண்ணோடு ஊடல்புரிந்த நீ
கரையோர கூழாங்கற்களுடன் சரசமாடினாய்!

இடையிடையே நாணலைத் தழுவிச்சென்றாய்!
சோலைகள் பல காவலிருந்தும்
கழிவு நீருக்கு இடம் கொடுத்து கற்பிழந்தாய்!

நதியே! சிலவேளை கற்கால காரிகையாய்
இலைதழைகளை அணிந்து நடமாடுகிறாய்!
கனவுகளுக்குள் நீ மூழ்கும்போது மலர்கள் உனக்குஆடை நெய்துகொடுக்க நடனமாடுகிறாய்!

அணைக்கட்டிற்குள் மட்டும்தான் நீ
அடக்கமான மங்கையாய் அமர்ந்திருக்கிறாய்!

நன்செய்யும் புன்செய்யும் உனது
இளைப்பாறும் இல்லங்களாய் இருக்க நீயோ
காற்றோடும் முகிலோடும் மோதி ஊருக்குள்
உலா வருகிறாய் அழையா விருந்தாளியாய்!

ஓட்டமும் நடையுமான ஓயாப்பயணம்
கடைசியில் கடலரக்கனோடு கரம் கோர்க்கத்தானா ?
நதியே! ஆட்டமும் பாட்டமும் ஒழித்து
உன் வாழ்வை அர்த்தப்படுத்தும் நாள் எந்நாளோ

 

neraimathi@rocketmail.com