இரும்புத்திரைக்குள் அலறும் அவலங்கள்

மானியூர் மைந்தன்

அன்னையே-என்
தாய் மண்ணே
வளங்கொளிக்கும் வன்னிமண்ணே!
ஆறுதல் சொல்லுதற்கு-எனக்கு
அருகதை இல்லையம்மா
மாயக்குரங்குகள்
மரமுலுப்பும் வெறியாட்டில்
வீழ்ந்ததம்மா-என் இனம்
அன்னை வருவாளென
அகதிகள் முகாம்களிலே
அநாதைகளாய்
எம் இளம் பிஞ்சுகள்
அந்தரித்துக் கிடக்கிறது
ஆறென விழிகள்
அணையுடைத்துப் பாய்கிறதே
கையிழந்து
காலிழந்து
கன்னியர் தம்கற்பிழந்து
இழப்பதற்கு எதுவுமின்றி
தவிக்கும் அவர்தம்
துயர்களின் ஈனக்குரல்கள்
வெளிவர மறுக்குதம்மா
ஊடகத்தின் காலடியில்
உடல் சுருங்கி
உலகம் கிடக்கையிலும்
திறந்தவெளிச் சிறையினிலே
என் உறவுகளின்
உணர்வுகளை
அறியமுடியாத
அவலங்கள் பலவம்மா
மிருகத்தைக் காப்பதற்கும்
ஒரு சங்கமுண்டு இங்கிலாந்தில்
ஈழத்தமிழனுக்காய்
கரம்நீட்ட தரணியிலே
யாருண்டு சொல்லம்மா?

 
navaas06@yahoo.de