விழ விழ எழுவோம்

மானியூர் மைந்தன்


தாய் மண்ணைக் காதலிக்கும்
கையாலாகாக் கவியொருவன்
கிறுக்கிய காகித வரிகள் இது

பசியால் காதடைத்து
கண்ணிருண்டு
கால்தளர்ந்து
சோர்ந்து வீழும் போதும்
மானமிழக்க மனமில்லா
மறவர் வாழும் பூமி

அரைகுறையாய் புதையுண்டு
அநாதைப்பிணங்களாய்
அவலங்களின் அரங்கேற்றம்
இழப்பதற்கு எதுவுமில்லை
எழுந்துவா என்னினமே
உத்தமத் தமிழ்ப்பிறப்புகளே
உங்கள் உருக்குக் கைகளால்
அநீதியை அழிக்கவாருங்கள்!

தன்மானத் தமிழ் தன்னில்
ஊற்றாய்சுரக்குது போர்க்குணம்
ஆற்றாத கொடுமை எண்ணி
அடிமனது கொதிக்குது
புழுங்கிச்சரியுது நெஞ்சு
விழிசொரியும் உறவுகள்
வழிதடுமாறி விழிக்குது

போதும் போதும்
அழுகையை நிறுத்தி
அணிவகுப்போம்
விழுதாகி நின்று
தோள்கொடுப்போம்
விழ விழ எழுவோம்-பகையை
வீழ்த்துவோம்
வெல்வோம்


navaas06@yahoo.de