*புற்றரவு அஞ்சும் புயல்இடி தனக்கே!*

அகரம்.அமுதா

கொக்கென நின்றாற் கொத்துதற் கன்றோ
பொக்கெனச்
சிரித்துப் பொருதுதல் நன்றோ
கொணர்ந்த
கருவியைக் கொடுத்துப்
பிணமாய்ச்
சாயும் பெருமைசிங் களர்க்கே!

தற்காப் புணர்ந்து தானாய் அகன்றால்
முற்போய்
வென்றதாய் மொழிவீர் கேள்மின்
இடுமயி
ராலெழும் எழிலே
நெடுமயி
ரெழிலின் நேரெனல் நகையே!

தீட்டுங் கருவியும் தீட்டா மதியும்
வாட்டுமென்
றறியா வழுவுடைச் சிங்கள!
மாற்றான்
கொடுத்த மதியால்
ஏற்றம்
எள்துணை என்பதும் இலதே

புற்றீசல் போலும் புறப்பா டெனினும்
வெற்றீசற்
கியாரே வெருள்வர்? விதிர்ப்பர்?
கற்றூண்
அஞ்சா; கரந்துறை
புற்றர
வஞ்சும் புயலிடி தனக்கே

கமுக்கம் காத்தால் கயமைக் குணத்தர்
துமுக்கியாற்
சுடுதொழில் தொடர்கிறார் எம்மவர்
வளைக்கையும்
பொருதும் வகையான்
வளைகையும்
இல்லை வணங்கலும் இலமே

பின்னடை வென்னும், பிதற்றும், தனக்கே
முன்னடை
வென்னும், முனையும், முனிவுறு
களிற்றின்
கையுறு கதலியாய்
நளிவடைந்
துழன்று நமனிடஞ் செலவே!