பிணம் செய்யும் தேசம்

இளைய அப்துல்லாஹ்

ஒப்பாரி வைப்பதற்கும்
பெண்கள் இல்லாமல்சிதறிக்கிடக்கின்றனவே பிரேதங்கள்
எந்த மதிப்பும் இல்லாமல்...
மூத்த பிள்ளை கொள்ளி வைக்க வேண்டுமென்று
ஆசைப்பட்ட அம்மாவின் பிரேதத்தை
யாரோ வந்து எரித்து விட்டு போகிறார்கள்

வயிறூதி வீங்கி வெடித்து
நிர்வாணமாய் நிணம் வடிக்கும் பிரேதங்கள்..

ஊர் கூடி பாடை கட்டி
மேளமடித்து
ஓப்பாரி வைத்து
சுண்ணமிடித்து
சுடலை போய்
என்றெல்லாம் இல்லாமல்

ட்றைக்டர் பெட்டியில் ஏற்றி மூடி
குழி வெட்டி டிப்பறால் கொட்டி
மண்ணை இழுத்து மூடி.....
பிரேதங்கள் புதைக்கப்படுகின்றன
வேறென்ன முடியும்

சங்கைக்குரியனவாக இருக்கும் ஒருவர் இறந்தால்
ஊரே இறந்து போனால்.....
நாய்களும் நரிகளும் முகர்ந்து பார்க்கின்றன பிரேதங்களை
ஊர் நெடுக பிரேதங்கள்

மண்மூடி மரங்களில் என்றெங்கும் பிரேதங்கள்
எந்த மரணத்தை மதிப்பது

பெண்கள் ஆண்கள் குழந்தைகள்எல்லாவற்றையும் குமித்து
வைத்திருக்கிறார்கள்
பிரேதங்களில் பிரிக்க முடியுமா?
சாதியை மதத்தை
ஆணா பெண்ணா என்றே அறிய முடியவில்லை
பிணங்காடாய் கிடக்கிறது எங்கள் தேசம்....


anasnawas@yahoo.com